மணிப்பூரில் பொது வேலை நிறுத்தம்: சுதந்திர தின விழா கொண்டாட்டம் முடக்கம்

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் பல்வேறு அமைப்புக்கள் பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்து இருந்ததால் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் முடங்கியது.  மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் மெய்டீஸ் மற்றும் குக்கி பழங்குடி சமூகத்தினரிடையே தொடங்கிய மோதல் கலவரமாக மாறியது. கடந்த மூன்று மாதங்களாக வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டு மாநிலத்தின் அமைதி பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தலைநகர் முழுவதும் சுதந்திர தினவிழா கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளை அரசு செய்து வந்தது. இந்நிலையில் நேற்று பல்வேறு அமைப்புக்கள் சார்பாக பொதுவேலை நிறுத்தப்போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

இதனால் தலைநகர் இம்பாலின் முக்கிய பகுதிகள் மற்றும் பல்வேறு கிராம பகுதிகளில் கடைகள், சந்தைகள் மூடப்பட்டு இருந்தன. பொதுமக்கள் நடமாட்டம் இன்றி தெருக்கள் வெறிச்சோடி கிடந்தன. அதிகாரப்பூர்வ உத்தரவின்பேரில் மலை மற்றும் பள்ளத்தாக்கு மாவட்டங்களில் உள்ள அரசு ஊழியர்கள் சுதந்திர தின விழா கொடியேற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். பொதுமக்கள் பலர் தங்களது வீடுகளில் தேசியக்கொடியை வைத்திருந்தனர். இந்நிலையில் மணிப்பூர் ரைபிள்ஸ் அணிவகுப்பு மைதானத்தில் முதல்வர் பைரன்சிங் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். அப்போது பேசிய முதல்வர், பைரன் சிங், அனைவரும் வன்முறையை நிறுத்த வேண்டும்.

இதற்கு முன் இருந்த விரைவான முன்னேற்றத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும். சில தவறான புரிதல்கள், சுயநல செயல்கள், நாட்டை நிலைகுலைய செய்வதற்கான வெளிநாட்டு சதி ஆகியவை விலைமதிப்பற்ற உயிர்கள் மற்றும் சொத்துக்களை இழப்பதற்கு வழிவகுத்தன. ஏராளமானோர் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர். இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது. பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் குடியேற்றப்படுவார்கள். தவறு செய்வது மனிதஇயல்பு. எனவே நாம் மன்னிக்கவும், மறக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்.

3000 ரெடிமேட் வீடுகள்
மாநிலத்தில் கலவரம் காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நிவாரண முகாம்களில் கடந்த மூன்று மாதங்களாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் நிவாரண முகாம்களில் இருந்து முதல் கட்டமாக சுமார் 3000 குடும்பங்கள் வெளியேறும் வகையில் ரெடிமேட் வீடுகளை அரசு அமைத்து வருகின்றது. கடந்த 26ம் தேதி தொடங்கிய இந்த பணிகள் 5 இடங்களில் நடந்து வருகின்றது. கடைசி தேதியான வருகிற 20ம் தேதிக்குள் பணிகளை முடிப்பதற்கு ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

The post மணிப்பூரில் பொது வேலை நிறுத்தம்: சுதந்திர தின விழா கொண்டாட்டம் முடக்கம் appeared first on Dinakaran.

Related Stories: