அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க ஆண்டிபட்டியில் புறவழிச்சாலை அமைக்கப்படுமா?

*வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி நகரில் அமைந்துள்ள நெடுஞ்சாலையில் தினந்தோறும் ஆயிரக்காணக்கான வாகனங்கள் சென்று வருவதால், போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர். விபத்துகளும் தொடர்ந்து எற்படுகிறது. எனவே நீண்ட கால கோரிக்கையான ஆண்டிபட்டி பகுதியில் புறவழிச்சாலை அமைக்கும் திட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆண்டிபட்டி பகுதி மாவட்டத்தின் நுழைவு பகுதியில் அமைந்துள்ளது. மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து கேரளா செல்லும் முக்கிய இணைப்பு சாலையாக இந்த ஆண்டிபட்டி சாலை அமைந்துள்ளது. தேனி மற்றும் கேரளா பகுதிகளில் இருந்து மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு எராளமான விளைபொருட்கள் இந்த வழியாக கொண்டு செல்லப்படுகிறது. மேலும் ஆண்டிபட்டி ராமேஸ்வரம் – கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. ஆண்டிபட்டி பகுதியில் செல்லும் நெடுஞ்சாலையில் இருந்து வைகை அணை, பாலக்கோம்பை, ஏத்தக்கோவில், புள்ளிமான்கோம்பை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் 4க்கும் மேற்பட்ட இணைப்புச் சாலைகள் உள்ளன.

ஆண்டிபட்டி சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களும் 150க்கும் மேற்பட்ட உட்கிராமங்களும் உள்ளன. இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் தங்களது வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கும், அல்லது மற்ற ஊர்களுக்கு செல்வதற்கும், மருத்துவமனைக்கு செல்வதற்கும் ஆண்டிபட்டி நகர் பகுதியை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் குமுளி, கம்பம், போடி போன்ற பகுதிகளில் இருந்து ஆண்டிபட்டி வழியாக மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமேஸ்வரம் போன்ற பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்தும், ஏராளமான வாகனங்களும் சென்று வருகின்றனர். இதனால் ஆண்டிபட்டியில் உள்ள சாலையில் தினசரி சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றனர்.

போக்குவரத்து நெரிசல் சாலையின் இருபுறமும் பள்ளிகள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், நகைக்கடைகள், பலசரக்கு கடைகள், மருத்துவமனைகள் அமைந்துள்ளன. சதாரண நாட்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். மற்ற விசேச நாட்கள், கோவில் திருவிழா நாட்கள், முகூர்த்த நாட்களில் காலையில் இருந்து இரவு வரை அதிகளவு போக்குவரத்து நெரிசல் இருக்கும். மேலும் ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள், இருச்சக்கர வாகனங்கள், கார்கள் உள்ளிட்ட இயங்கி வருகிறது. இதனால் அதிகளவு வாகனங்கள் வருவதால் போக்கு வரத்து நெரிசல் அதிகமாக காணப்படும்.

இதனால் பொதுமக்கள் சாலையை கடப்பதற்கு அரை மணி நேரம் ஆகிவிடுகிறது. ஆண்டிபட்டி நகரில் சக்கம்பட்டியில் இருந்து கொண்டமநாயக்கன்பட்டி பகுதி வரை சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவு இருக்கும். இதனை கடப்பதற்கு சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் ஆவதால் வாகன ஓட்டிகளும் தவிக்கின்றனர். மேலும் ஆண்டிபட்டி அருகே தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மேல்சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் செல்வதற்கும் போக்கு வரத்து நெரிசலால் தாமதம் ஏற்படுகிறது. இதனால் உயிர்சேதம் எற்படும் அபாயமும் உருவாகியுள்ளது. போக்குவரத்து நெரிசலால் இருச்சக்கர வாகனத்தில் செல்பவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.

கிடப்பில் போடப்பட்ட பணிகள்

தேனி மாவட்டத்தின் நுழைவு பகுதியான ஆண்டிபட்டியில் போக்குவரத்திற்கான உட்கட்டமைப்பு பலவீனமாகவே உள்ளது. வெளியூர் வாகனங்கள் நகருக்குள் வராமல் இருந்தாலே பெரும் நெரிசல் குறையும். நகருக்கு வெளியே உள்ள நெடுஞ்சாலையில் இரண்டு பக்கமும் வாகனங்கள் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அனைத்து வாகனங்களும் நகருக்குள் வந்து செல்வதால் போக்குவரத்து‌ நெரிசல் ஏற்படுகிறது.

எனவே புறவழிச்சாலையை திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் என்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்து வந்தனர். பொதுமக்களின் கோரிக்கையைத் தொடர்ந்து டி.ராஜகோபாலன்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் துவங்கி சிலுக்குவார்பட்டி, சக்கம்பட்டி பகுதியில் உள்ள சீதாராம்தாஸ் நகர், சத்யாநகர் பின்புறம், முத்துகிருஷ்ணாபுரம், எஸ்.எஸ்.புரம் வழியாக சென்று நெடுஞ்சாலையில் இணையும் வகையில் புறவழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான சர்வே பணிகளும் நடைபெற்று வந்தது. அதன்பின்பு அந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டது. புறவழிச்சாலைக்காக சர்வே செய்த இடங்களில் குடியிருப்புகளும், கட்டங்களும் அதிகரித்து விட்டது. தற்போது மாற்று இடம் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தெரிகிறது.

போக்குவரத்து நெரிசல் குறையவில்லை

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘ஆண்டிபட்டி பகுதியில் கடந்த ஆட்சியில் சாலை மேம்பாட்டிற்காக எந்த தொலைநோக்கு திட்டமும் செயல்படுத்தவில்லை. இதனால் தினமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகிறோம். ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரை சந்தித்து இதற்கான மனு அளித்துள்ளார்.ஆண்டிபட்டி நகரில் வைகை அணை சாலை பிரிவில் இருந்து பாலக்கோம்பை சாலை பிரிவு வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, சாலைகள் அகலப்படுத்தப்பட்டன.

ஆனாலும் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை. இந்த சாலையில் பாலக்கோம்பை பிரிவு, தேவர் சிலை, பேருந்து நிலையம், போலீஸ் நிலையம் இந்த பகுதிகளில் அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தற்போதைய திமுக அரசு மக்களுக்கு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. ஆண்டிபட்டி நகருக்கு வெளியே உள்ள நெடுஞ்சாலையில் இரண்டு பக்கமும் வாகனங்கள் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் ஆண்டிபட்டி பகுதிக்கு புறவழிச்சாலை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

The post அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்பிக்க ஆண்டிபட்டியில் புறவழிச்சாலை அமைக்கப்படுமா? appeared first on Dinakaran.

Related Stories: