வருமான வரி கணக்கு தாக்கல் அவகாசம் நீட்டிக்கப்படாது: ஒன்றிய அரசின் வருவாய் துறை செயலர் தகவல்

புதுடெல்லி: வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்கும் திட்டம் இல்லை என்று வருவாய் துறை செயலர் தெரிவித்தார். ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் உச்ச வரம்பை தாண்டும் அனைவரும், வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். வரி ஆதாய நடவடிக்கையில் ஈடுபட்டு, உச்ச வரம்புக்கு கீழ் வந்தாலும், கணக்கு தாக்கல் செய்வது கட்டாயமாகும்.
கடந்த 2022-2023ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை அபராதமின்றி தாக்கல் செய்வதற்கான அவகாசம் வருகிற 31 ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு பிறகு வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய, ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோர், ரூ. 1,000 அபராதம் செலுத்த வேண்டும். ரூ.5 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டுவோர், வருகிற டிசம்பர் வரை ரூ. 5,000, ஜனவரி, முதல் மார்ச் வரை, ரூ. 10,000 அபராதம் செலுத்த வேண்டும்.

இதனிடையே, வட மாநிலங்களில் ஏற்பட்டிருக்கும் வெள்ளம் மற்றும் கனமழையைக் கருத்தில் கொண்டு, வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை, ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது. இந்நிலையில், இதுகுறித்து மத்திய வருவாய் துறை செயலர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறுகையில், ‘’கடந்தாண்டை போல், வருமான வரி தாக்கலுக்கான கடைசி தேதியை நீட்டிக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை. வரி செலுத்துவோர் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். கடந்தாண்டை விட அதிகமானோர் இதுவரை கணக்கு தாக்கல் செய்துள்ளதால் இதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பதற்கான திட்டம் எதுவுமில்லை,’’ என்று தெரிவித்தார்.

 

The post வருமான வரி கணக்கு தாக்கல் அவகாசம் நீட்டிக்கப்படாது: ஒன்றிய அரசின் வருவாய் துறை செயலர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: