நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழை வைகை அணை நீர்மட்டம் 6 நாட்களில் 6 அடி உயர்வு

ஆண்டிபட்டி: தொடர் மழையால் வைகை அணையின் நீர்மட்டம் கடந்த 6 நாட்களில் 6 அடி அதிகரித்துள்ளது. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள வைகை அணை, மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் விவசாயத்திற்கும், மதுரை மாநகர குடிநீருக்கும் முக்கிய ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதுமான அளவு பெய்யாத காரணத்தால் வைகை அணையின் நீர்மட்டம் உயரவே இல்லை. மேலும் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 50 அடிக்கும் கீழே சரிந்து காணப்பட்டதால் வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் திறக்கப்படும் முதல் போக பாசனத்திற்கான தண்ணீர் இந்தாண்டு திறக்கப்படவில்லை.

கடந்த 2 வாரங்களாக வெள்ளிமலை, வருசநாடு உள்ளிட்ட வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அணை நீர்மட்டம் படிப்படியாக உயரத் தொடங்கியது. கடந்த 15ம் தேதி 53 அடியாக இருந்த நீர்மட்டம் தற்போது 59 அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 6 நாட்களில் 6 அடி உயர்ந்துள்ளது. நேற்று காலை வைகை அணையின் நீர்மட்டம் 58.76 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1,492 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக 69 கன அடி வெளியேற்றப்படுகிறது. நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

The post நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழை வைகை அணை நீர்மட்டம் 6 நாட்களில் 6 அடி உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: