இந்நிலையில் தான் பழங்குடியின பெண்கள் இருவரை மெய்டீஸ் சமூகத்தினர் நிர்வாணப்படுத்தி சாலையில் ஊர்வலமாக அழைத்து செல்வது போன்று சமூகவலைதளங்களில் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படு்த்தியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் நடந்த கொடூரத்தின் உச்சமாக கருதப்படும் இச்சம்பவம் கடந்த மே மாதம் நடந்த பேரணியின் போது அரங்கேறியுள்ளது. இதில் இரு பெண்களையும் வயல்வெளியில் வைத்து கூட்டு பலாத்காரம் செய்து துன்புறுத்தியுள்ளனர்.
இந்தியா முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்துக்கு உச்சநீதிமன்றம் உள்பட காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனத்தை பதிவு செய்துள்ளன. மணிப்பூர் கலவரம் குறித்து வாய் திறக்காத பிரதமர் மோடி முதன்முறையாக கண்டனத்தை பதிவு செய்துள்ளார். மணிப்பூரில் நடக்கும் கலவரங்கள் குறித்து வெளியே பரவாமல் தடுக்க ஒன்றிய பாஜ அரசு அம்மாநிலத்தில் இணைய சேவையை துண்டித்தது. இருந்தாலும் விளையாட்டு வீராங்கனை, ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆகியோர் இணையதளத்தில் வீடியோவை வெளியிட்டு மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த உதவ வேண்டும் என்று கதறி கெஞ்சினர்.
உண்மை நிலவரத்தை எப்போதும் மறைக்கமுடியாது என்பது போன்று தற்போது பழங்குடியின பெண்கள் மானபங்கம் செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த கொடுமைக்கு ஒன்றிய அரசு பொறுப்பேற்றே தீர வேண்டும்.
பாஜ ஆளும் மாநிலங்களில் உள்ள பிரச்னைகள் மற்றும் ஒன்றிய பாஜ அரசின் மக்கள் விரோத திட்டங்களை எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்கும் போதெல்லாம் அவர்களை அடக்குவதற்காகவும், மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவும் அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறையை ஏவி பழிவாங்கும் நடவடிக்கையில் தான் ஒன்றிய அரசு கவனம் செலுத்திவருகிறது.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜ எம்பியுமான பிரிட்ஜ் பூஷனுக்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் கூறி டெல்லியில் பல நாட்கள் போராட்டம் நடத்தியும் ஒன்றிய அரசு கண்டுகொள்ளவே இல்லை. அதே போன்று தற்ேபாது மகாராஷ்டிர மாநில பாஜ துணை தலைவர் சோமையாவின் ஆபாச வீடியோ மராத்தி ெசய்தி சேனல்களில் வெளியாகி பரபரப்பாகியுள்ளது. இதில் பல அரசு பெண் அதிகாரிகளையும் அவர் மிரட்டி பலாத்காரம் செய்துள்ளது தெரியவந்துள்ளது. ஒன்றிய பாஜ அரசு முதலில் நாட்டின் கண்களாக போற்றப்படும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
The post கொடூரத்தின் உச்சம் appeared first on Dinakaran.