காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அண்ணா பொறியியல் கல்லூரியில், நாடாளுமன்ற தேர்தலின்போது பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று தொடங்குகிறது. இப்பணிக்காக போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபடவுள்ளனர். மேலும், வாக்கு எண்ணும் பணியில் 950 அரசு ஊழியர்கள் ஈடுபடவுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 19ம்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில், காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், செய்யூர், மதுராந்தகம், திருப்போரூர், உத்திரமேரூர் போன்ற 6 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து 1932 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், யாருக்கு வாக்களித்தும் பயன்படும் கருவி என வாகனங்கள் மூலம் காஞ்சிபுரம் பொன்னேரி கரை பகுதியில் உள்ள அண்ணா பொறியியல் உறுப்பு கல்லூரிக்கு வளாகத்திற்கு கொண்டுவரப்பட்டன.
பின்னர், சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குப்பெட்டி இந்திரங்கள் வைக்கப்பட்டு, யாரும் உள்ளே நுழையாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து, கடந்த 20ம்தேதி முதல் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை அண்ணா பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பு அறையில் வைத்து, மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் மற்றும் தேர்தல் பார்வையாளர் (பொது) பூபேந்திர எஸ்.சவுத்திரி தற்போது தேர்தல் முடிவுகளுக்காக தமிழக அரசு அறிவித்துள்ள விவேக் சதுர்வேதி ஆகியோர் தலைமையில், அனைத்து வேட்பாளர்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு பூட்டி சீல் வைக்கப்பட்டதை அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டு எண்ணப்பட உள்ளது.
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 8,53,456 ஆண்கள், 8,95,107 பெண்கள் என மொத்தம் 17,48,563 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 12,53,582 வாக்காளர்கள் தங்கள் வாக்கை பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து, இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சி வேட்பாளர்கள், முகவர்கள் மற்றும் பார்வையாளர்கள், பத்திரிகையாளர்கள் காவல்துறை என அனைவருக்கும் வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்லும் வழிகளுக்கு கட்டைகள் கட்டி சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கைக்காக தயார் நிலையில் உள்ளது.
இதனை, மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் உள்ளிட்ட அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த, வாக்கு எண்ணிக்கை 6 சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்கு எண்ணிக்கை என்னும் விவரம் வருமாறு: காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் 23 சுற்றுகள் வாக்குகள் எண்ணப்பட உள்ளது. அதைத்தொடர்ந்து, உத்திரமேரூர் 21 சுற்றுகள், மதுராந்தகம் 19, செய்யூர் 18, திருப்போரூர் 22, செங்கல்பட்டு 31 சுற்றுகள் என சட்டமன்ற தொகுதி வாரியாக எண்ணப்படுகின்றன.
இதற்கான தேர்தல் அதிகாரி, உதவி தேர்தல் அதிகாரி, உதவியாளர்கள் என ஏராளமானவர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதானல், காஞ்சிபுரம் அண்ணா பொறியியல் உறுப்பு கல்லூரியில் வாக்குகள் எண்ணும் பணிக்காக புதியதாக 293 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக 750 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்கு எண்ணும் பணியில் 950 அரசு ஊழியர்கள் ஈடுபடவுள்ளனர்.
* காஞ்சி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறப்போவது யார்?
காஞ்சிபுரம் நாடாளுமன்ற (தனி) தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் 5 பேர் மற்றும் 6 சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 11 பேர் போட்டியிட்டத்தில், செவ்வாய்க்கிழமை வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றி பெறுபவர் பெயர் இன்று அறிவிக்கப்படவுள்ளது.
காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் தற்போதையை எம்பியாக இருந்து வரும் க.செல்வம் மீண்டும் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். இவர் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக துணை செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார். அதிமுக சார்பில் பரங்கிமலை கிழக்கு ஒன்றிய செயலாளரும், மாநில ஜெயலலிதா பேரவையின் துணை செயலாளராகவும் இருந்து வரும் பெரும்பாக்கம் இ.ராஜசேகர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
இதன்மூலம் திமுகவும், அதிமுகவும் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் நேரடியாக களம் காணவுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த பாமக, தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநயாக கூட்டணியில் இணைந்து களம் காண்கிறது. பாமக சார்பில் திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றிய கவுன்சிலர் வெங்கடேசனின் மனைவி ஜோதி பாமக வேட்பாளராக மாம்பழம் சின்னத்தில் போட்டியிட்டுள்ளார்.
தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் அக்கட்சியின் திருப்போரூர் சட்டப் பேரவை தொகுதி தலைவாரக இருந்து வரும் வி.சந்தோஷ்குமார் வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர்களை தவிர 6 பேர் சுயேட்சைகளாகவும் போட்டியிட்டது உட்பட மொத்தம் 11 பேர் போட்டியிட்டனர். காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் 4 முனை போட்டி நடைபெற்று வந்த நிலையில், யார் வெற்றி பெறுவார் என்பது இன்று மாலைக்குள் தெரிந்து விடும்.
The post காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு: 950 அரசு ஊழியர்கள் பணியில் ஈடுபடுகின்றனர் appeared first on Dinakaran.