கோவை: ‘கூட்டணியில் இருந்து விலகியது விலகியதுதான். முதலில் அண்ணாமலை தலைவர் பதவியை காப்பாற்றட்டும்’ என்று எஸ்.பி.வேலுமணி பதிலடி தந்து உள்ளார். கோவையில் நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது: நாங்கள் 2019ல் 19.39 சதவீதம் வாக்குகள் பெற்ற நிலையில், தற்போது 20.46 சதவீதம் வாக்குகள் பெற்று உள்ளோம். பாஜ கூட்டணியை விட அதிமுக கூட்டணி அதிகம் வாக்குகளை பெற்றுள்ளது. நான் அண்ணாமலையை விமர்சனம் செய்ய விரும்பவில்லை. ஆனால், அண்ணாமலை அதிமுக குறித்து கொஞ்சம் அதிகமாக பேசி உள்ளார்.
அண்ணாமலை, அண்ணா, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பற்றி குறைகூறி பேசி உள்ளார். அவர் அரசியலில் வந்து கொஞ்சம் நாள் தான் ஆகிறது. எங்கள் தலைவர்களை பற்றி பேசியதால் தான் பிரச்னை. அதிமுக, பாஜ கூட்டணி முறிவுக்கு அண்ணாமலை தான் காரணம். கூட்டணி அமைத்து இருந்தால் 30-35 தொகுதியில் வெற்றி பெற்று இருக்கலாம். எங்கள் கூட்டணியில் தெளிவாக உள்ளோம். அதிமுக கூட்டணி தர்மத்தை கடைப்பிடிக்கும். விலகி வந்தால் விலகி வந்தது தான். அண்ணாமலை எங்களை விமர்சனம் செய்யவதை விட்டு விட வேண்டும். 2014ல் சிபி ராதாகிருஷ்ணன் வாங்கிய வாக்குகள் விட இப்போது அண்ணாமலை குறைவாக வாங்கி உள்ளார்.
பாஜ 2016ல் நோட்டாவுக்கு கீழ் வாங்கியது நினைவு இல்லையா?. வரும் 2026ல் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி அமையும். அண்ணாமலை எங்களை விமர்சனம் செய்வதை விட்டு விட்டு தேர்தலில் 500 நாட்களில் நிறைவேற்றுவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். இப்போது அவர் 4 லட்சம் வாக்கு வாங்கி இருக்கிறார். எனவே, அவர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். முதலில் அண்ணாமலை தலைவர் பதவியை காப்பாற்றட்டும். அதிமுக அடுத்து ஆட்சிக்கு வர வேண்டிய வேலையை பார்த்து வருகிறது. அண்ணாமலை ஆரம்பத்தில் எங்களை விமர்சனம் செய்து தான் கூட்டணி போனது. மீண்டும் விமர்சனம் செய்ய ஆரம்பித்து இருக்கிறார். நாங்கள் கூட்டணி விவகாரத்தில் மிகவும் தெளிவாக இருக்கிறோம். எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் மிகப்பெரிய கூட்டணி அமையும். இவ்வாறு அவர் கூறினார்.
The post கூட்டணியில் இருந்து விலகியது விலகியதுதான் முதலில் தலைவர் பதவியை அண்ணாமலை காப்பாற்றட்டும்: வேலுமணி பதிலடி appeared first on Dinakaran.