பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் அரசாணிக்காய் அறுவடை துவங்கிய நிலையில், பெரும்பாலும் கேரளாவுக்கே அனுப்பப்படுகிறது. பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் தென்னைக்கு அடுத்தப்படியாக மானாவாரி பயிர் மற்றும் காய்கறி சாகுபடி அதிகளவில் உள்ளது.இதில் வடக்கிபாளையம்,நெகமம்,கோமங்கலம்,கோட்டூர்,சமத்தூர்,ராமபட்டினம்,கோபாலபுரம்,சூலக்கல், கோவில்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம பகுதிகளில் பூசணி மற்றும் அரசாணிக்காய் சாகுபடியில் விவசாயிகள் அதிகம் ஆர்வம் கட்டுகின்றனர். பருவமழை மற்றும் கோடை மழையை எதிர்நோக்கி சாகுபடி செய்யப்படும் அரசாணிக்காய் குறிப்பிட்ட நாட்களில் அறுவடை செய்யப்பட்டு மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.
இதில், இந்த ஆண்டில் ஜனவரி முதல் பல மாதமாக வெயிலின் தாக்கம் மற்றும் வறட்சியால் சுற்றுவட்டார கிராமங்களில் அரசாணிக்காய் சாகுபடி என்பது மிகவும் குறைந்தது. இந்நிலையில், தென்மேற்கு பருவமழையை எதிர்நோக்கி விவசாயிகள் பலர் தங்கள் விளை நிலங்களில் அரசாணிக்காய் சாகுபடியில் ஈடுபட்டனர்.தொடர்ந்து பெய்த பருவமழையால், அரசாணிக்காய் நல்ல விளைச்சலடைய ஆரம்பித்தது.தற்போது சில இடங்களில் நல்ல விளைச்சலடைந்த அரசாணிக்காய் அறுவடை துவங்கப்பட்டுள்ளது. உள்ளூர் பகுதியிலேயே அரசாணிக்காய் அறுவடை துவங்கியதால்,வரும் நாட்களில் வெளியிடங்களிலிருந்து வரும் அரசாணிக்காயால் விலைய குறைய வாய்ப்புள்ளது. தற்போது பல கிராமங்களில் அறுவடை செய்யும் அரசாணிக்காய்கள், ஓணம் பண்டிகையையொட்டி சுமார் 75 சதவீதம் கேரள மாநிலத்துக்கே கொண்டு செல்லப்படுகிறது.
சில கேரளா வியாபாரிகளே நேரடியாக தோட்டத்துக்கு வந்து, மொத்த விலை கொடுத்து சரக்கு வாகனங்களில் வாங்கிச் செல்கின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து மார்க்கெட்டுக்கு அரசாணிக்காய் வரத்து குறைவாக இருந்த போது, அந்நேரத்தில் ஒரு கிலோ ரூ.30 முதல் ரூ.35 வரை விற்பனையானது. தற்போது, சுற்றுவட்டாரத்திலிருந்து வரத்து அதிகரிப்பால் அதிகபட்சமாக ஒரு கிலோ மொத்த விலைக்கு சராசரியாக ரூ.20 முதல் ரூ.25க்கே விற்பனை செய்யப்படுகிறது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
The post பருவமழையால் விளைச்சல் அதிகம்; கிராமங்களில் அரசாணிக்காய் அறுவடை பணி துவக்கம்; ஓணம் பண்டிகைக்காக கேரளா அனுப்பப்படுகிறது appeared first on Dinakaran.