அரசு, உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான 4.12 கோடி விலையில்லா பாடப்புத்தகங்கள் தயார்: மே மாதம் பள்ளிகளுக்கு விநியோகம்

சென்னை: அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 7ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான முதல் பருவப் பாடபுத்தகம், 8ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிப்போருக்கான பாடப்புத்தகம் என 4 கோடியே 12 லட்சம் புத்தகங்களை, தமிழ்நாடு பாடநூல் கழகம் அச்சிட்டு தயார் நிலையில் வைத்துள்ளது.  தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கின்றவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகம் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

அதேபோல மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில்(சிபிஎஸ்இ) படிப்போருக்கான மொழிப்பாடப் புத்தகங்களையும் (விலைக்குரியது) தமிழ்நாடு பாடநூல் கழகம் அச்சிட்டு தருகிறது. இந்நிலையில் வரும் 2023-2024ம் கல்வி ஆண்டுக்கான, 1 முதல் 7ம் வகுப்புவரை படிப்போருக்கு முதல் பருவப் பாடப்புத்தகங்கள் 97 லட்சம் அளவுக்கு அச்சிடப்பட்டுள்ளன. முதல் வகுப்புக்கு 10 லட்சத்து 98 ஆயிரத்து 256, 2ம் வகுப்புக்கு 10 லட்சத்து 82 ஆயிரத்து 671, 3ம் வகுப்புக்கு 10 லட்சத்து 98 ஆயிரம், 4ம் வகுப்புக்கு 11 லட்சத்து 67,375, 5ம் வகுப்புக்கு 12 லட்சத்து 37 ,194, 6ம் வகுப்புக்கு 22 லட்சத்து 47,901, 7ம் வகுப்புக்கு 21 லட்சத்து 45 ஆயிரத்து 979 பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

அதேபோல, 8ம் வகுப்பு மாணவ மாணவியருக்காக 35 லட்சத்து 63 ஆயிரத்து 103, 9ம் வகுப்புக்கு 33 லட்சத்து 78 ஆயிரத்து 295, 10ம் வகுப்புக்கு 35 லட்சத்து 54 ஆயிரம் புத்தகங்களும், பிளஸ் 1 வகுப்புக்கு 47 லட்சத்து 83 ஆயிரத்து 555, பிளஸ் 1 தொழில் பிரிவு மாணவர்களுக்காக 77 ஆயிரத்து 469, பிளஸ் 2 தொழில் பிரிவுக்கு 71 ஆயிரத்து 239, பிளஸ் 2 பொதுப்பிரிவினருக்கு 45 லட்சத்து 13 ஆயிரம் பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இலவச பாடப்புத்தகங்கள் தவிர விற்பனைக்கான புத்தகங்களை பொருத்தவரையில் 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு மொத்தம் 1 கோடியே 12 லட்சத்து 30 ஆயிரம், புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

மேலும், சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கான தமிழ் மொழிப்பாடப்புத்தகங்கள் மொத்தம் 8 லட்சத்து 63 ஆயிரத்து 127 அச்சிடப்பட்டுள்ளன. இவை விலைக்கு விற்பனைக்கு வழங்கப்படும். மேற்கண்ட புத்தகங்களில் விலையில்லா பாடப்புத்தகங்கள் மே மாதம் அனைத்து மாவட்டங்களில் செயல்படும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவ மாணவியருக்கு வினியோகம் செய்ய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் அங்கிருந்து பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பள்ளிகள் திறக்கும் போது மாணவ மாணவியருக்கு வினியோகம் செய்யப்படும்.

The post அரசு, உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கான 4.12 கோடி விலையில்லா பாடப்புத்தகங்கள் தயார்: மே மாதம் பள்ளிகளுக்கு விநியோகம் appeared first on Dinakaran.

Related Stories: