புதுடெல்லி: சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காத விவகாரத்தில் தமிழ்நாடு அரசை போலவே பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி அரசும் அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில், ‘நெருப்போடு விளையாடக் கூடாது’ என ஆளுநரை கண்டித்து உச்ச நீதிமன்றம் கடந்த 10ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. அதன் முழு விவரம் உச்ச நீதிமன்ற இணையதளத்தில் நேற்று இரவு பதிவேற்றம் செய்யப்பட்டது. அதில், ‘ஒரு அடையாளப் பதிவியான ஆளுநருக்கு தனியாக எந்த அதிகாரமும் இல்லை. மாநில அரசும், அமைச்சர்களும் சொல்வதன்படிதான் ஆளுநர் செயல்பட முடியும்.
ஆளுநர் ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காவிட்டால் சட்டப்பேரவைக்கு திரும்பி அனுப்ப வேண்டும். அதில் திருத்தம் செய்ய வலியுறுத்தலாம். அதுதொடர்பாக முடிவெடுக்கும் முழு அதிகாரமும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே உள்ளது. இந்த விஷயத்தில் ஆளுநர் விரைந்து செயல்பட வேண்டும். இதில் காலதாமதம் செய்வது அரசியலமைப்பிற்கு எதிரானது. மேலும், மாநில சட்டப்பேரவைகளில் சட்டம் இயற்றுவதை தடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. அதோடு, சட்டசபை கூட்டத்தின் செல்லுபடியாகும் நிலையை தீர்மானிக்கும் அதிகாரமும் ஆளுநருக்கு இல்லை. கூட்டத்தொடரில் சந்தேகம் எழுப்பும் எந்தவொரு முயற்சியும் ஜனநாயகத்திற்கு பெரும் ஆபத்துகளை ஏற்படுத்தும்’ என்று கூறப்பட்டுள்ளது.
The post மாநில சட்டப்பேரவையில் சட்டம் இயற்றுவதை தடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.