கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வேண்டும்: கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

வேலூர்: கவர்னர் ஆர்.என்.ரவியை குடியரசு தலைவர் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். வேலூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பில் நடந்த நிகழ்ச்சிகளில் நேற்று கலந்து கொண்ட மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அளித்த பேட்டி: முதல்வர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி நீண்ட கடிதம் எழுதியுள்ளார். அதில் ஆளுனரின் மரபுக்கு மாறான செயல்பாடுகள் குறித்தும், அரசியல் சட்டத்துக்கு புறம்பாக செயல்படுவது குறித்தும் விவரமாக எழுதியுள்ளார். எனவே, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, தமிழ்நாடு ஆளுனரை திரும்ப பெற வேண்டும். இல்லையெனில் ஆளுநர் எதிலும் பங்கேற்க முடியாது போய்விடும். எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதால் தமிழகத்தில் ஆட்சி போகாது. ராகுல்காந்தி பிரதமராக வேண்டும் என்பதற்காகவும், மதசார்பற்ற கட்சிகள் ஒன்று சேர வேண்டும் என்பதற்காகவும் முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.

இதனால் மக்கள் மத்தியில் அவரது செல்வாக்கு பெருகும். தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் கைது செய்துள்ளது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு முறையான எல்லைக்கோட்டை வரையறை செய்வதுதான். மேகதாது பிரச்னையில் தமிழ்நாடு அரசின் நிலைதான் தமிழ்நாடு காங்கிரசின் நிலைப்பாடும். அப்போதைய அதிமுக அரசு மேகதாது அணை விவகாரத்தில் மவுனமாக இருந்து விட்டது. குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1,000 உதவித்தொகை எல்லோருக்கும் வழங்கக்கூடியது அல்ல. அரசு ஊழியர்கள், 10 ஏக்கர் நிலம் வைத்துள்ளவர்களுக்கு எப்படி உதவித்தொகை வழங்க முடியும். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்க வேண்டும். இத்திட்டத்துக்காக தமிழ்நாடு காங்கிரஸ் முதல்வரை பாராட்டுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் தொகுதிகளை கேட்கும். இவ்வாறு அவர் கூறினார்.

The post கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வேண்டும்: கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: