அரசு பள்ளியில் படித்து அசத்திய விஞ்ஞானிகள் திண்டுக்கல் டூ சந்திரயான்-3

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்த இருவர், இஸ்ரோ விஞ்ஞானிகளாக பணிபுரிந்து சந்திரயான்- 3 வெற்றி குழுவில் பங்காற்றி சிறப்பு சேர்த்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே வேலூர் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் அவ்வூரிலுள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 5ம் வகுப்பு வரை படித்து, பின்னர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு வரை படித்துள்ளார். பின்னர் பழநி பாலிடெக்னிக் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் படிப்பு, பெங்களூரில் தொழில் பயிற்சி முடித்து டிஆர்டிஓ பட்டய படிப்பில் தேர்ச்சி பெற்று இஸ்ரோவில் பணியில் சேர்ந்தார். அங்கு பணியாற்றி கொண்டு பிஇ, எம்இ படித்து முடித்துள்ளார்.

இஸ்ரோவில் 35 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி தற்போது பெங்களூருவில் ஜியோ கமாண்டட் எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் துறை தலைவராக பணிபுரிந்து வருகிறார். அரசு பள்ளியில் பிறந்து இஸ்ரோ விஞ்ஞானியாக பணியாற்றி சந்திரயான்- 3 திட்டத்தில் பங்கேற்ற ரவிச்சந்திரனுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டியை சேர்ந்தவர் காமேஷ் குரு. கம்பிளியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு வரை படித்த இவர், பின்னர் திருச்சி அரியமங்கலம் சேஷசாயி தொழில்நுட்ப நிறுவனத்தில் (2005-2008ல்) மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ படித்து பட்டதாரியானார்.

தொடர்ந்து என்ஐடியில் எம்எஸ் (நான்-டிஸ்ட்ரக்டிவ் டெஸ்டிங்) படித்தார். அதன்பின் காமேஷ் குரு, இஸ்ரோவில் விஞ்ஞானியாக கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார். சந்திரயான்- 3 பணியில் ஏவுகணை, செயற்கைக்கோள் உந்துவிசை அமைப்புகளில் விஞ்ஞானி மற்றும் செயற்கைக்கோள் திரவ இன்ஜின் தரக்கட்டுப்பாட்டில் இன்ஜினியராக உள்ளார். சந்திரயான்- 3 வெற்றியில் பங்காற்றிய இவர் தற்போது ஆதித்யா செயற்கைக்கோள் திட்டத்திலும் பணிபுரிந்து வருவபது குறிப்பிடத்தக்கது. இவரை அப்பகுதியினர் பாராட்டி வருகின்றனர்.

The post அரசு பள்ளியில் படித்து அசத்திய விஞ்ஞானிகள் திண்டுக்கல் டூ சந்திரயான்-3 appeared first on Dinakaran.

Related Stories: