3 நாடுகளுக்கு அரசு முறை பயணம்; பிஜி நாடாளுமன்றத்தில் இந்திய ஜனாதிபதி உரை: திரவுபதி முர்முவுக்கு உற்சாக வரவேற்பு

சுவா: அரசுமுறைப் பயணமாக பிஜி சென்றுள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை, அந்நாட்டு அதிபர் வில்லியம் மைவாலிலி அன்புடன் வரவேற்றார். பிஜி நாட்டின் அதிபர் வில்லியம் மைவாலிலி கட்டோனிவேரே அழைப்பின்பேரில் இரண்டு நாள்கள் சுற்றுப்பயணமாக நேற்று டெல்லியில் இருந்து பிஜியின் சுவாவை அடைந்த குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை, அந்த நாட்டு பிரதமர் சிதிவேனி ரபுகா, பிஜி நாட்டுக்கான இந்திய தூதர் கார்த்திகேயன் உள்பட பிற அதிகாரிகள் விமான நிலையத்தில் பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர்.

தொடர்ந்து சுவாவில் உள்ள அதிபர் மாளிகையில், அந்நாட்டு அதிபர் வில்லியம் மைவாலிலி கட்டோனிவேரே, குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை அன்புடன் வரவேற்றார். அப்போது இந்தியா-பிஜி இடையிலான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக பிஜி நாடாளுமன்றத்தில் திரவுபதி முர்மு உரையாற்றினார். மேலும், அந்த நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினருடன் அவர் கலந்துரையாடினார்.

பிஜி பயணத்தை நிறைவுசெய்த பின் நியூசிலாந்து மற்றும் டிமோர்-லெஸ்டே ஆகிய நாடுகளுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பயணம் மேற்கொள்கிறார். மூன்று நாடுகளுக்கும் அவர் பயணம் மேற்கொள்வதன் மூலம் ‘ஆக்ட் ஈஸ்ட் கொள்கை’ மேலும் வலுப்படுத்தப்படும் என எதிர்பாா்க்கப்படுவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய குடியரசுத் தலைவர் ஒருவர், பிஜி மற்றும் டிமோர்-லெஸ்டேக்கு செல்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

The post 3 நாடுகளுக்கு அரசு முறை பயணம்; பிஜி நாடாளுமன்றத்தில் இந்திய ஜனாதிபதி உரை: திரவுபதி முர்முவுக்கு உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: