முன்னாள் நிதி அமைச்சரும், வெளியுறவு அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா பாஜவில் இருந்து கடந்த 2018ல் விலகி திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார். 86 வயதாகும் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
2016ல் செய்யப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு கிட்டத்தட்ட 100 சதவீத பணம் வங்கிக்கு திரும்பிவிட்டது. கருப்பு பணத்தை கண்டுபிடிக்கவும் ஒழிக்கவும் கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு ஒரு நபர் மீது கூட, ஒரு நிறுவனம் மீது கூட கருப்பு பணம் வைத்திருந்ததாக வழக்கு தொடரப்பட்டு நான் பார்க்கவில்லை.
எனவே கருப்பு பணம் எதுவும் இல்லை. எல்லா பணமும் வங்கிக்கு வந்து விட்டால் கருப்பு பணத்தை எல்லாம் வெள்ளையாக்கி விட்டனர். இதுதான் பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வரப்பட்டதன் நோக்கமே. தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக விவகாரங்கள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளியாகிக் கொண்டிருக்கிறது. இது உலகிலேயே மிகப்பெரிய ஊழல் என ஒன்றிய நிதி அமைச்சரின் கணவரே கூறியிருக்கிறார். தேர்தல் பத்திரம் மூலம் பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து கருப்பு பணத்தை பெறுவதற்காக பாஜ அரசு என்னென்ன செய்திருக்கிறது என்பதைப் பற்றிய தகவல்கள் சிறிது சிறிதாக வெளியாகிக் கொண்டிருக்கிறது.
இவற்றின் மூலம் பாஜ அரசின் கொள்கை என்ன என்பதை தெளிவாக அறியலாம். தங்களின் ஊழல் குறித்த ரகசியங்களை மூடி மறைப்பதுதான் அரசின் கொள்கை. இதெல்லாம் மக்களுக்கு ஒருபோதும் தெரியாது என நம்புகிறார்கள். பாஜ அரசு ஆட்சியில் இருக்கும் வரை மட்டுமே நேர்மையானது. ஆட்சியில் இருந்து வெளியேறியதும் அதன் ரகசியங்கள் தோலுரிக்கப்படும். பாஜ ஆட்சி மிகவும் ஊழல் நிறைந்த ஆட்சி என்பதை மக்கள் உணர்வார்கள். அவர்களின் ஊழலுக்கு பணமதிப்பிழப்பு மற்றும் தேர்தல் பத்திரங்கள் ஆகியவை இரு முக்கிய உதாரணங்களாகும்.
மக்களவை தேர்தலில் பாஜ கூட்டணி 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்கிறார்கள். அவர்களுக்கு என்ன இருக்கிறது? பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 7 தொகுதிகளையும் சேர்த்து 550 இடங்களிலும் வெல்வோம் என்று கூட சொல்வார்கள். இதற்கெல்லாம் ஒரு முடிவே இல்லை. ஜார்க்கண்ட்டில் சட்டப்பேரவை தேர்தலின் போதும் 65 இடங்களில் வெல்வோம் என்றார்கள். என்ன ஆனது? 25ல் மட்டுமே பாஜ வென்றது. அதுபோல, இம்முறை 200 தொகுதிகளைக் கூட பாஜ தாண்டாது.
இந்தியா கூட்டணியில், வலுவான மாநில கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அவை சிறப்பாக செயல்படும். அதே போல, காங்கிரசும் முந்தைய தேர்தலை விட சிறப்பாக செயல்படும். எனவே இந்தியா கூட்டணியை குறைத்து மதிப்பிடக் கூடாது. எல்லா விஷயத்திலும் பாஜ நம்பகத்தன்மையை இழந்து விட்டது. பாஜ அரசு விரும்பாத புள்ளிவிவரங்களை வெளியிடாமல் தேசிய புள்ளியியல் ஆணையம் மறைக்கிறது என்றார்.
தேர்தல் ஆதாயத்திற்காகவே கச்சத்தீவு பற்றி மோடி பேச்சு
கச்சத்தீவு விவகாரம் குறித்து யஷ்வந்த் சின்ஹா கூறுகையில், ‘‘சர்வதேச கடல் எல்லைக்கோடு நிர்ணயிக்கப்பட்ட சமயத்தில், கச்சத்தீவு இலங்கையின் கடல் எல்லைக்குள் சென்றது. இதுதான் உண்மை. இதில் இலங்கைக்கு எந்தப் பகுதியையும் இந்தியா விட்டுக் கொடுத்த கேள்விக்கே இடமில்லை. எனவே இப்போது கச்சத்தீவு பிரச்னையை எழுப்பினால் அது இந்தியா, இலங்கை உறவைதான் பாதிக்கும். தேர்தலில் பல பிரச்னைகள் எழுப்பப்படுவது வழக்கம். நீங்கள் எழுப்பும் பிரச்னையின் தாக்கம் குறித்து அறிந்திருக்க வேண்டும். ஆனால் பிரதமர் மோடி நேரடியாக கச்சத்தீவு பிரச்னையை எழுப்புவது மிகவும் திகைப்பாக இருக்கிறது. கச்சத்தீவை திரும்பப் பெற நீங்கள் என்ன பலத்தை உபயோகிக்கப் போகிறீர்களா? தேர்தல் சமயத்தில் கச்சத்தீவு பிரச்னையை எழுப்புவது என்பது வெறும் தேர்தல் ஆதாயத்திற்காக தவிர வேறெதற்கும் இல்லை’’ என்றார்.
சீன விவகாரத்தில் தவறான தகவல் தருகிறார் அமித்ஷா
சீன எல்லை விவகாரம் குறித்து சின்ஹா கூறுகையில், ‘‘சீனா விவகாரத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாட்டு மக்களுக்கு தவறான தகவல்களை சொல்லிக் கொண்டிருக்கிறார். நமது நிலப்பரப்பில் ஒரு அங்குலத்தை கூட சீனா அபகரிக்கவில்லை என பிரசாரத்தில் கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால் கடந்த 2022 பிப்ரவரியில் நாடாளுமன்றத்தில் கேள்விக்கு பதிலளித்த வெளியுறவு இணை அமைச்சர், 38,000 சதுர கிமீ இந்திய நிலப்பரப்பை சீனா அபகரித்துள்ளதாக கூறி உள்ளார். நாடாளுமன்றத்திற்கு ஒரு பதில், மக்களுக்கு ஒரு பதிலா?’’ என கேள்வி எழுப்பி உள்ளார்.
The post ஆட்சி மாறியதும் ரகசியங்கள் தோலுரிக்கப்படும் தேர்தல் பத்திரம், பணமதிப்பிழப்பு பாஜவின் மிகப்பெரிய ஊழல்கள்: யஷ்வந்த் சின்ஹா பேட்டி appeared first on Dinakaran.