மெஹ்சானா: நாட்டின் விரைவான வளர்ச்சிக்கும், உலகம் முழுவதும் அதனை பாராட்டுவதற்கும் நிலையான அரசை ஏற்படுத்திய மக்கள் சக்தியே காரணம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள கெராலுவில் ரூ.5,950 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், மாநில பாஜ தலைவர் சி.ஆர்.பாட்டீல் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மோடி பேசியதாவது.
நீண்ட காலமாக நீடித்து வரும் நிலையான அரசு, எடுத்த ஒவ்வொரு முடிவுகளும் மாநிலத்திற்கு பயனளிக்கிறது. குஜராத் இதனை அனுபவித்து உள்ளது. நாட்டின் விரைவான வளர்ச்சிக்கும், அதற்காக உலக அரங்கில் இந்தியா பாராட்டப்படுவதற்கும் நிலையான அரசை ஏற்படுத்திய மக்கள் சக்தியே காரணமாகும். நாட்டின் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் துணிச்சலான முடிவுகளின் பின்னணியில் கடந்த பல ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட வலுவான கட்டமைப்புகள் உள்ளன. அவையே குஜராத்தின் விரைவான வளர்ச்சிக்கும் காரணமாகும். இவ்வாறு அவர் பேசினார்.
சரக்கு வழித்தடத்தில் விராம்காம்-சமகியாலி ரயில் பாதையை இரட்டிப்பாக்குதல், நீர்ப்பாசனத் திட்டங்கள், சாலைகளை அகலப்படுத்துதல், சபர்மதி ஆற்றில் தடுப்பணை கட்டுதல், குடிநீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகியவற்றுக்கும் மோடி அடிக்கல் நாட்டினார்.
The post உலகளவிலான பாராட்டு நாட்டின் விரைவான வளர்ச்சிக்கு நிலையான அரசே காரணம்: பிரதமர் மோடி appeared first on Dinakaran.