எடப்பாடியை பொதுச் செயலாளராக அங்கீகரித்த தேர்தல் ஆணைய அறிவிப்பை ரத்து செய்யக்கோரி புதிய மனு: டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல்

புதுடெல்லி: ‘அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்த தலைமை தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்’ என டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிகப்படியான பெரும்பான்மை இருப்பதை அடிப்படையாகக் கொண்டு எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்து கடந்த 20ம் தேதி டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

எடப்பாடி பழனிச்சாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்வு செய்தது செல்லாது. ஏனெனில் 26.04.2022ல் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ளவில்லை. அதேப்போன்று கட்சி விதிகளில் ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து உறுப்பினராக இருந்தால் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு போட்டியிடலாம் என்ற விதியை மாற்றி பத்து ஆண்டுகள் உறுப்பினர்களாக இருக்க வேண்டும், ஐந்து ஆண்டுகள் தலைமைக் கழக பணிகளில் இருக்க வேண்டும், பத்து மாவட்ட செயலாளர்கள் முன் மொழிய வேண்டும்.

பத்து மாவட்ட செயலாளர்கள் வழி மொழிய வேண்டும். ஒரு மாவட்ட செயலாளர் ஒருவருக்கு தான் முன்மொழியலாம் அல்லது வழி மொழியலாம் என மாற்றி, அதிமுக கட்சியில் 76 மாவட்ட செயலாளர்கள் உள்ள நிலையில் புதிய விதிகள் படி மூன்று நபர்கள் தான் போட்டியிட முடியும் என்ற சூழ்நிலையை உருவாக்கி உள்ளனர். இது அதிமுக சட்ட விதிகளுக்கு முரணானதாகும். எனவே எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரித்த தேர்தல் ஆணையத்தின் 20.04.2023 தேதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அதேப்போன்று ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர், பொதுச்செயலாளர் தேர்வையும் அங்கீகரிக்க கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post எடப்பாடியை பொதுச் செயலாளராக அங்கீகரித்த தேர்தல் ஆணைய அறிவிப்பை ரத்து செய்யக்கோரி புதிய மனு: டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் appeared first on Dinakaran.

Related Stories: