காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம் வளாகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா நோட்டு, புத்தகங்களை கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மையம் கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.
இக்கூட்டத்தில் கலெக்டர் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 322 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதன்படி, நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், கலெக்டர் கலைச்செல்வி மோகன் கலந்துகொண்டு, ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தின் வாயிலாக, ஓரிக்கை, ஆதுரா மனவர்ச்சிக் குன்றியோருக்கான சிறப்புப் பள்ளிக்கு 35 எண்ணிக்கை கொண்ட விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.
அதேபோல், காஞ்சிபுரம் ஆத்திச்சுவடி மனவளர்ச்சிக் குன்றியோருக்கான சிறப்புப்பள்ளிக்கு 33 எண்ணிக்கை கொண்ட விலையில்லா பாடப்புத்தகங்களும், காஞ்சிபுரம், வித்யபிரகாசம் மனவளர்ச்சிக் குன்றியோருக்கான சிறப்புப் பள்ளிக்கு 37 எண்ணிக்கை கொண்ட விலையில்லா பாடப்புத்தகங்களும் என மொத்தம் 105 எண்ணிக்கை கொண்ட விலையில்லா பாடப்புத்தகங்களை மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், உதவி கலெக்டர் (பயிற்சி) அர்பிட்ஜெயின், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாபு, காஞ்சிபுரம் தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சுமதி, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post காஞ்சிபுரம் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு விலையில்லா நோட்டு புத்தகம்: கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.