வன வாழ் மக்கள், வன வளம் பாதிக்காமல் வன உரிமை சட்டத்தை அமல்படுத்த வேண்டும்: தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா அறிவுரை

சென்னை: வன உரிமைச் சட்டத்தை நிறைவேற்றும்போது வன வாழ் மக்களை கருணையுடன் அணுக வேண்டும். வன வளம் பாதிக்கப்படாமல் சட்டத்தை அமல்படுத்த வேன்டும் என்று தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவுறுத்தியுள்ளார். சென்னை, தலைமை செயலகத்தில் நேற்று தமிழ்நாடு வனத்துறை சார்பில் வன உரிமைச் சட்டம் 2006 செயல்படுத்துதல் தொடர்பான ஒருநாள் கருத்தரங்கம் மற்றும் ‘வன உரிமைச் சட்டம் 2006’ வழிகாட்டுதல் புத்தகம் வெளியிடும் நிகழ்ச்சி தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் நடந்தது. நிகழ்ச்சியை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து வன உரிமைச் சட்டம் 2006 தொடர்பான வழிகாட்டுதல் புத்தகத்தை வெளியிட்டார். நிகழ்ச்சிக்கு வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ முன்னிலை வகித்தார்.

பின்னர் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா பேசியதாவது: தமிழகத்தில் இதுவரை 12728 தனிநபர் அனுபவ உரிமைச் சான்றுகள் மற்றும் 671 சமுதாய அனுபவ உரிமைச் சான்றுகள் வழங்கப்பட்டுள்ளது, இச்சட்டத்தை நிறைவேற்றும் துறை அலுவலர்கள் வன வாழ் மக்களை கருணையுடன் அணுக வேண்டும். வனவளம் பாதிக்கப்படாமல் சட்டத்தினை அமல்படுத்திட வேண்டும் என்றார். மேலும் கூறுகையில், பழங்குடியினர் நலத்துறை அலுவலர்கள் வன உரிமைச்சட்டம் 2006 அமல்படுத்துவதில் தங்களது முழு ஒத்துழைப்பினை வழங்குவார்கள் என்றார். நிகழ்ச்சியில் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் லட்சுமி பிரியா, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் வனத்துறை தலைவர் சுப்ரத் மஹோபத்ரா, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் இயக்குநர், தமிழ்நாடு வன உயர் பயிற்சியகம், கோவை சேவாசிங், பழங்குடியின நலத்துறை இயக்குநர் எஸ்.அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post வன வாழ் மக்கள், வன வளம் பாதிக்காமல் வன உரிமை சட்டத்தை அமல்படுத்த வேண்டும்: தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா அறிவுரை appeared first on Dinakaran.

Related Stories: