காட்டுப்பன்றிகளை விரட்டியடிக்க புதிய டெக்னிக்

இன்றைய காலக்கட்டத்தில் விவசாயம் செய்து மகசூல் பார்ப்பதற்குள் பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டியுள்ளது. வறட்சி, புயல், மழை வெள்ளம் என இயற்கை பேரிடர்களால் விவசாயிகள் பாதிக்கப்படுவது ஒரு பக்கம் என்றால், யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளாலும் பாதிக்கப்பட வேண்டியிருக்கிறது. இதில் வனவிலங்குகள் விவசாய நிலங்களுக்குள் வந்துவிட்டால், விளைச்சலை துவம்சம் செய்யாமல் போகாது. மலை மற்றும் காட்டுப்பகுதியை ஒட்டிய வயல்கள் என்றால் இந்த பாதிப்புகள் நிச்சயம் இருக்கும். யானை, காட்டுப்பன்றி போன்ற விலங்குகள் வந்து சென்றால் விளைச்சல் கடுமையாக பாதித்து, மகசூலில் பெரும்பகுதி சேதமாகிவிடும். இதனால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும்.

இந்நிலையில் தற்போது தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காட்டுப்பன்றிகளின் நடமாட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் விவசாயிகள் தங்கள் வயல்களிலேயே காவல் காத்தபடி இருக்கிறார்கள். வனவிலங்குகளை விரட்ட பல்வேறு உபாயங்களையும் கையாண்டு வருகிறார்கள். இருந்தபோதும் அனைத்தையும் தாண்டி வயலுக்குள் புகும் காட்டுப்பன்றிகள் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், நிலக்கடலை, சூரியகாந்தி, கரும்பு, வாழை உள்ளிட்ட பல்வேறு பயிர்களை துவம்சம் செய்து வருகின்றன. காட்டுப்பன்றிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த முள்வேலி, வண்ணத்துணிகள் ஆகியவற்றை வயலைச் சுற்றி கட்டியும், பல்வேறு ரசாயன மருந்துகளைப் பயன்படுத்திப் பார்த்தும் விவசாயிகளுக்கு தோல்வியே மிஞ்சி வருகிறது.

இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் கீழ் வேலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் விரிஞ்சிபுரம் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் மூலம் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதன்பயனாக காட்டுப்பன்றியை இயற்கை மூலிகை மருந்துகள் மூலம் விரட்டி அடிக்கலாம் என கண்டறிந்துள்ளனர். முதற்கட்டமாக நெல், கேழ்வரகு, சூரியகாந்தி, பப்பாளி, கரும்பு, வாழை மற்றும் நிலக்கடலை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் இந்த மூலிகை மருந்துகளை வைத்து சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் காட்டுப்பன்றிகளால் ஏற்படும் சேதத்தின் அளவு குறைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மூலிகை மருந்தின் வாசத்திற்கு காட்டுப்பன்றிகள் வயலுக்குள் வருவதையே தவிர்த்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த மூலிகை விரட்டியின் செயல்திறன் குறைந்தது 3 மாதங்கள் வரையில் இருக்கும் என கூறப்படுகிறது. ‘‘ஒரு ஏக்கருக்கு, தாவர காட்டுப்பன்றி விரட்டி 500 மி.லி., போதுமானது. பயிர் செய்திருக்கும் நிலத்தைச் சுற்றி வரப்புப் பகுதிகளில் இரண்டடி உயரமுள்ள குச்சிகளை 10 அடி இடைவெளியில் ஊன்றி 1- 1 சதவீதம் அடி உயரத்தில் கட்டுக்கம்பி கொண்டு இணைத்து கட்ட வேண்டும்.

இந்த குச்சிகளின் இருபுறமும் குறைந்தது இரண்டு அடிகளுக்கு களைச்செடிகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு ஏக்கருக்கு 100 சிறிய டப்பாக்கள் தேவைப்படும். ஒவ்வொரு டப்பாவிலும் மூடிக்கு கீழ் நான்கு துளைகளை இட வேண்டும். ஒவ்வொரு டப்பாவிலும் சுமார் 5 மி.லி அளவு இயற்கையான முறையில் விரிஞ்சிபுரம் வேளாண் ஆராய்ச்சி மையத்தில் தயாரிக்கப்பட்ட மூலிகை மருந்தினை ஊற்றி மூட வேண்டும். பின்பு நான்கு துளைகளில் எதிர் எதிர் திசை
களில் உள்ள இரண்டு துளைகளை நூல் கொண்டு இணைத்து டப்பாவை மூடி முடிச்சுப் போட வேண்டும்.

மேலும் இந்த நூல் மூலமாக வயலைச் சுற்றியுள்ள கம்பியில் கட்டி டப்பாக்களை நேராக தொங்க விட வேண்டும். டப்பாவை சாய்வாக இல்லாமல் நேராக கட்ட வேண்டும். இந்த டப்பாவில் இருந்து வெளியேறும் வாசனை, மெதுவாக வெளியேற்றப்பட்டு காட்டுப்பன்றிகள் வராமல் குறைந்தது 3 மாதம் வரை தடுக்கும். இயற்கையான, காட்டுப்பன்றி விரட்டி தேவைப்படும் விவசாயிகள், விரிஞ்சிபுரம் வேளாண்மை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவரை தொலைபேசி மூலமாக (0416 2900242) (அ) நேரிலோ (அ) மின்னஞ்சல் (arsvrm@tnau.ac.in) மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்’’ என்கிறார் விரிஞ்சிபுரம் வேளாண் ஆராய்ச்சி நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்.

ெதாடர்புக்கு:
அ. திருமுருகன்
திட்ட ஒருங்கிணைப்பாளர்,
வேளாண்மை அறிவியல் நிலையம்,
விரிஞ்சிபுரம், வேலூர் மாவட்டம்.
தொலைபேசி: 0416- 2400192.

The post காட்டுப்பன்றிகளை விரட்டியடிக்க புதிய டெக்னிக் appeared first on Dinakaran.

Related Stories: