நாம் அனைவருமே ஸ்குட் சாப்பிட்டு இருப்போம். அதாவது கடம்பா சாப்பிட்டு இருப்போம். பலருக்கு கடல் உணவுகளில் பிடித்த டிஷ்ஷாக இந்த ஸ்குட் இருக்கும். சிலருக்கு கடம்பாவை ப்ரை, கிரேவி என என வேறுவேறு சுவையில் சாப்பிட பிடிக்கும். ஆனால், அதே கடம்பாவை எந்த மசாலாவும் சேர்க்காமல், ஆனால் சுவையாக ப்ரை செய்து கடம்பா 65 மாதிரி கோல்டன் ஸ்குட் ப்ரை என கொடுக்கிறது தி.நகரில் உள்ள கடல் கிட்சன் என்கிற உணவகம். கடல் உணவுகளுக்காக மட்டுமே தனியாக உணவகம் நடத்தும் இந்த ஹோட்டலில் இந்த கோல்டன் ஸ்குட் ப்ரை மிகவும் பிரபலம். எந்த காரமும் இல்லாமல் சுவையும் அதிகமாக இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுகிறார்கள்.
லெஸ்ஸி
பாலில் இருந்து கிடைக்கிற அனைத்து விதமான பொருட்களையும் நாம் சாப்பிட்டு இருப்போம். அதிலும் குறிப்பாக லெஸ்ஸி அனைவராலும் சாப்பிடக்கூடிய ஒன்று. நல்ல வெயில் நேரத்தில் இந்த லெஸ்ஸியை குடிக்கும்போது அவ்வளவு இதமாக இருக்கும். இந்த லெஸ்ஸி சென்னையின் எல்லா தெருக்களிலுமே கிடைத்தாலும், செளக்கார் பேட்டையில் உள்ள அகர்வால் பவன் லெஸ்ஸி ரொம்ப ஸ்பெஷல். இந்தக் கடையில் நல்ல திடமான, சுவையான லெஸ்ஸி கிடைக்கிறது. இதைக் குடிப்பதற்கே தனிக்கூட்டம் வருகிறது. அதற்கு காரணம் அந்தக் கடை துவங்கி ஐம்பது வருடங்களாக ஒரே மாதிரியான சுவையில் லெஸ்ஸியை கொடுப்பதுதான்.
டொமேட்டோ சிக்கன்
சென்னையில் ஒவ்வொரு உணவகத்திலும் ஒரு ஸ்பெஷல் ரெசிபி இருக்கும். அந்த வகையில் சென்னை அண்ணா நகரில் உள்ள கறிபாக்ஸ் உணவகத்தில் டொமேட்டோ சிக்கன் ரொம்ப பேமஸ். தக்காளி அதிகம் போடப்பட்டு, கொஞ்சம் புளிப்புச் சுவையும், மிளகின் காரமும் தூக்கலாக இருக்கும். இதற்கென்று தேர்வு செய்யப்படும் கோழி 700 கிராம் முதல் 800 கிராம் வரை மட்டுமே எடை இருக்கும். அதனால் கறியில் மசாலாவின் வாசனை நன்கு இறங்கி சிக்கன் நல்ல ஜூஸியாக இருக்கும். முதலில் கோழிக்கறியோடு மசாலாவை மண்சட்டியில் வேகவிடுவார்கள். பிறகு தோசைக்கல்லில் நல்ல ட்ரை ஆகும் வரை பிரட்டி எடுத்து மண்தட்டில் வைத்து பரிமாறுவார்கள்.