பறக்கை பகுதியில் கன்னிப்பூ அறுவடை இந்த மாதம் இறுதியில் தொடங்கும்

நாகர்கோவில் : பறக்கை பகுதியில் நெற்பயிரில் கதிர்கள் வந்துள்ளது. இந்த மாதம் இறுதியில் கன்னிப்பூ அறுவடை தொடங்கும். குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடி நடந்து வருகிறது. மாவட்டத்தில் நடக்கும் இருபோக சாகுபடியில் கன்னிப்பூ சாகுபடியின் போது அம்பை 16, திருப்பதிசாரம் 5 ரக நெல் சாகுபடியும், கும்பப்பூ சாகுபடியின்போது பொன்மணி, திருப்பதிசாரம் 3 ரக நெல் சாகுபடியும் செய்து வருகின்றனர். இதனை தவிர பாரம்பரிய நெல் ரகங்களை பல விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

மாவட்டத்தில் குளத்து, ஆற்றுபாசனத்தை பயன்படுத்தி சாகுபடி நடக்கிறது. தற்போது குமரி மாவட்டத்தில் சுமார் 4 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நெல்சாகுபடி பணி முடிந்துள்ளது. பல பகுதிகளில் தண்ணீர் இல்லாத காரணத்தால், சாகுபடி பணிகள் தாமதம் ஆகி வருகிறது. பலர் கன்னிப்பூ சாகுபடி பணியை கைவிட்டுள்ளனர். தற்போது சாகுபடி செய்தால் வடகிழக்கு பருவமழையின் போது பயிர்கள் அழிந்துவிடும் என விவசாயிகள் சாகுபடி செய்யாமல் உள்ளனர். குறிப்பாக திருவிதாங்கோடு பகுதியில் சுமார் 50 ஏக்கர் நிலத்தில் சாகுபடி பணியை கைவிட்டுள்னர். இதைபோல் கல்படி ஏலாவிலும் ஒரு சில வயல்களில் மட்டும் சாகுபடி பணி நடந்து வருகிறது.

மற்ற வயல்களில் எந்த வித பயிரும் போடாமல் உள்ளனர். இதுபோல் ஆற்றுபாசனத்தை நம்பியுள்ள பகுதிகளில் ஒரு சில வயல்களில் மட்டுமே சாகுபடி பணி நடந்துள்ளது. குளத்து பாசன வசதி பெறும் பகுதிகளில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு சாகுபடி தொடங்கியது. குறிப்பாக பறக்கை, பால்குளம், தேரூர், சுசீந்திரம் உள்ளிட்ட குளங்கள் மூலம் பாசன வசதி பெரும் வயல்பரப்புகளில் சாகுபடி பணி நடந்தது.

தற்போது 95 நாட்கள் கடந்த நிலையில் நெற்பயிர்களில் கதிர் வந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், துத்தநாகம் குறைபாடால் பறக்கை, பால்குளம் பகுதியில் நெற்பயிரின் மேல் மஞ்சளாக காட்சி அளித்தது. கடந்த இருதினங்களாக மாவட்டத்தில் மழை பெய்து வருவதால், அந்த மஞ்சள் நிறம் மாறி நெற்பயிர்கள் பச்சையாக மாறியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் நெற்பயிரில் கதிர் வந்துள்ளதால், அடுத்தகட்டத்திற்கு பறக்கை விவசாயிகள் சென்றுள்ளனர். இது குறித்து பறக்கை பகுதி விவசாயி பெரியநாடார் கூறியதாவது:

குளத்து பாசனத்தை நம்பியுள்ள பகுதிகளில் பயிர்கள் நல்ல நிலையில் உள்ளது. பறக்கையில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிரில் கதிர்கள் வந்துள்ளது. நெற்கதிர்கள் வந்துள்ள நெற்பயிர்கள் ஜூலை கடைசி மற்றும் ஆகஸ்ட் மாதம் தொடக்கத்தில் அறுவடை பணி தொடங்கும். தற்போது போதிய மழை பெய்யாததால் தெங்கம்புதூர் பகுதியில் உழவுபணிகளை மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. விவசாயிகள் ஆற்று தண்ணீரை நம்பியே உள்ளனர். இன்னும் ஒரு வாரத்தில் கால்வாய், சானல்களில் தண்ணீர் விடுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். அதன்பிறகே தெங்கம்புதூர் பகுதியில் சாகுபடி தொடங்கும் என்றார்.

The post பறக்கை பகுதியில் கன்னிப்பூ அறுவடை இந்த மாதம் இறுதியில் தொடங்கும் appeared first on Dinakaran.

Related Stories: