10 லட்சம் பேர் இலக்கை தாண்டி நான் முதல்வன் திட்டத்தில் 13 லட்சம் பேர் பயன்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் நடைபெறும் தமிழ்நாடு திறன் போட்டிகள் – 2023 இணையபதிவு தொடக்க விழாவை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இதில், உயர் கல்வி துறை அமைச்சர் பொன்முடி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், டாக்டர் டி.இளங்கோவன் பங்கேற்றனர். தொடர்ந்து “ஸ்கில் ஆன் வீல்ஸ்” என்ற நடமாடும் திறன் ஊர்தியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் அரசு தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் அரசுப்பள்ளி மாணவர்களால் அமைக்கப்பட்ட திறன் காட்சி அரங்குகளை அவர் பார்வையிட்டார்.

தமிழ்நாடு திறன் போட்டிகள் 2023ல் பங்கேற்று வெற்றி பெறும் மாணவர்கள், பங்கேற்கும் இந்திய திறன் போட்டிகள் மற்றும் பிரான்ஸ் நாட்டில் உள்ள லயன்ஸ் நகரத்தில் உள்ள உலகத்திறன் போட்டிகள் 2024 ஆகியவற்றில் அவர்கள் சிறப்பாக பங்கேற்று வெற்றி பெறுவதை உறுதி செய்யும் வகையில் போட்டியாளர்களுக்கு பயிற்சி அளிக்க முன்னணி நிறுவனங்களான 32 பெரிய நிறுவனங்களுடன் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு நடந்த உலகத்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த அனுஸ்ரீ, சுபசீஸ் பால், சரஸ்வதி ஆகிய மூன்று பேரும், இந்திய திறன் போட்டி வெற்றியாளர்களும் கவுரவிக்கப்பட்டனர்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: நான் முதல்வன் திட்டம் மூலம் 10 லட்சம் மாணவர்கள் பயன் பெற இலக்கு நிர்ணயித்தோம், ஆனால் தற்போது 13 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் 40 சதவீதம் பெண்கள் பணிபுரிந்து வருகிறனர். இது இந்திய சராசரியை விட 2% அதிகம். நான் முதல்வன் திட்டம் இந்திய அளவில் திறன் மேம்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் 55 பிரிவுகள் மூலம் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. கடந்த ஆண்டு நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 36 பேர் இந்திய அளவில் சென்று பதக்கங்கள் வென்றுள்ளனர். கல்லூரி மாணவர்கள் திறன் மேம்பாட்டில் தமிழகம் சார்பில் 23 பதக்கம் பெறுவது இதுவே முதல் முறை. மாணவர்கள் தொழில் திறன்களை அதிகரித்தால்தான் தொழில் முனைவோராக முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

The post 10 லட்சம் பேர் இலக்கை தாண்டி நான் முதல்வன் திட்டத்தில் 13 லட்சம் பேர் பயன்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.

Related Stories: