கோவை மாவட்டம், குனியமுத்தூர் காந்தி நகர் சுகுனாபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (52), பெயின்டர். இவரது மனைவி கலையரசி (50), மகன் அருண் (25), மகள் அகல்யா (26). இதில் அருண் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். திருமணமாகவில்லை. அகல்யாவுக்கு மாப்பிள்ளை தேடி வந்தனர். இந்நிலையில் செல்வராஜ் குல தெய்வ கோயிலான தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே கீழையூரில் உள்ள அக்னி வீரனார் கோயிலில் தரிசனம் செய்ய மனைவி, மகன், மகளுடன் காரில் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டார். காரை அருணின் நண்பரும், சாப்ட்வேர் இன்ஜினியருமான ஈரோடு மாவட்டம் வில்லரசன்பட்டியை சேர்ந்த விஷ்ணு (25) ஓட்டினார்.
நேற்று அதிகாலை 2.30 மணியளவில் கரூர் மாவட்டம் குளித்தலையில் கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளி அருகே கார் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலிருந்து திருச்சி வழியாக திருப்பூருக்கு சென்ற அரசு பஸ்சும், காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதில் பஸ்சுக்கு அடியில் கார் பாதி அளவு சிக்கி நசுங்கியது. இதில் காரில் இருந்த 5 பேரும் இடிபாட்டுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து முசிறி தீயணைப்பு நிலைய வீரர்கள், குளித்தலை போலீசார் இடிபாடுகளுக்கிடையே சிக்கி இருந்த 5 பேரின் உடல்களையும் சுமார் ஒரு மணி நேரம் போராடி மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எஸ்பி பெரோஸ்கான் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். கரூர் கலெக்டர் தங்கவேல் மருத்துவமனைக்கு நேரில் சென்று 5 பேரின் உடல்களை பார்வையிட்டார். விபத்து குறித்து செல்வராஜின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் பஸ்சிலிருந்த 35 பயணிகள், டிரைவர், கண்டக்டர் காயமின்றி தப்பினர். இதையடுத்து திருப்பூர் சென்ற வேறு பஸ்களில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்து காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து தொடர்பாக அரசு பஸ் டிரைவர் திருப்பூரை சேர்ந்த லோகநாதனை(51) குளித்தலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், காரை ஓட்டி வந்த விஷ்ணு சில நொடிகள் கண் அயர்ந்து விட்டதால், இந்த விபத்து நடந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
பிறந்தநாளே இறந்தநாளானது
விபத்தில் உயிரிழந்த அருணும், விஷ்ணுவும் நெருங்கிய நண்பர்கள். அருணின் குடும்பத்தினர் குலதெய்வ கோயிலுக்கு செல்ல திட்டமிட்டபோது அருண், விஷ்ணுவையும் கோயிலுக்கு அழைத்துள்ளார். இதைத் தொடர்ந்து அவர் கோவை வந்துள்ளார். பின்னர் காரை வாடகைக்கு எடுத்து நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு சென்றுள்ளனர். இதில் விஷ்ணுவிற்கு ேநற்று முன்தினமும், அருணுக்கு நேற்றும் பிறந்த நாள். இறப்பிலும் நண்பர்கள் பிரியாதது அவர்களது நண்பர்களுக்கு இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
The post குளித்தலையில் அதிகாலை பயங்கர விபத்து: கார் மீது அரசு பஸ் மோதல்; ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி: குலதெய்வ கோயிலுக்கு சென்ற போது சோகம் appeared first on Dinakaran.