விருதுநகர்-காவுத்தம்பாளையம் வரையிலான உயர்மின் கோபுர திட்டத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் 4வது நாளாக போராட்டம்

 

திருப்பூர், மே. 18: தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தினால் விருதுநகர் முதல் திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையம் வரை அமைய உள்ள உயர்மின் கோபுர திட்டத்தின் பவர் ஸ்டேஷன் காவுத்தம்பாளையத்தில் அமைய உள்ளது. இந்த பவர் ஸ்டேஷனில் இருந்து 100, 150, 200 கிலோ வாட் என அனைத்து திசைகளிலும் மின்சாரம் எடுத்து செல்வார்கள். இதனால் பவர் ஸ்டேஷனை சுற்றியுள்ள ஊர்களும், விவசாய நிலங்களும் பாதிக்கப்படும் என்பதால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் சார்பில் கடந்த 14-ந் தேதி முதல் காவுத்தம்பாளையம் வாய்த்தோட்டம் பகுதியில் தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். இதற்கிடையே போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு ஊத்துக்குளி தாசில்தார் தங்கவேல் மற்றும் வருவாய் அதிகாரி ரமேஷ், கிராம நிர்வாக அதிகாரி சேதுராமன் மற்றும் போலீசார் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தை கைவிடும்படியும், இது தொடர்பாக மனுவாக கலெக்டரிடம் கொடுக்கும்படியும் தெரிவித்தனர். ஆனால் இதற்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று 4-வது நாளாக போராட்டம் நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

The post விருதுநகர்-காவுத்தம்பாளையம் வரையிலான உயர்மின் கோபுர திட்டத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகள் 4வது நாளாக போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: