நீலகிரி மாவட்டத்தில், ஆண்டு தோறும் ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை துவங்கி இரு மாதங்கள் பெய்யும். இச்சமயங்களில் எந்நேரமும் சாரல் மழை பெய்து கொண்டிருக்கும் நிலையில், விவசாயிகளுக்கு தேவையான மழை நீர் கிடைக்கும்.
இதனால், மலைப்பாங்கான பகுதிகளில் கூட விவசாயம் மேற்கொள்வது வாடிக்கை. அதன் பின் இரு மாதங்கள் மழை சற்று குறைந்து காணப்படும். பின் அக்டோம்பர் மாதம் துவங்கி இரு மாதங்கள் வடகிழக்கு பருவ மழை பெய்யும். இச்சமயங்களில், விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களை தயார் செய்து பல்வேறு வகையான மலைக்காய்கறிகளை பயிரிடுவது வாடிக்கை.
இந்நிலையில், கடந்த மாதம் துவங்கிய மழை அவ்வப்போது நீலகிரி மாவட்டத்தில் பெய்து வருகிறது. கடந்த வாரம் முழுக்க நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்தது.
இதனால் விவசாயிகள் அனைத்து பகுதிகளிலும் தங்களது நிலங்களை தயார் செய்து வருகின்றனர். சமமான பகுதிகள் மட்டுமின்றி மலைப்பாங்கான பகுதிகளிலும் விவசாயம் மேற்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக உரம் கலந்த புதிய மண் கொட்டப்பட்டு அனைத்து நிலங்களும் தயார் செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், அனைத்து பகுதிகளிலும் தற்போது விதைப்பு மற்றும் நடவு பணிகளிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கேரட், வெள்ளை பூண்டு மற்றும் உருளைக்கிழங்கு போன்ற பயிர்கள் விதைப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
The post நீலகிரியில் விவசாயத்திற்கு நிலங்களை தயார் செய்யும் பணியில் விவசாயிகள் மும்முரம் appeared first on Dinakaran.