உண்மை தகவல்களை மறைத்து வழக்கு தொடர்ந்தவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: உண்மை தகவல்களை மறைத்து வழக்கு தொடர்ந்தவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, பாடி, திருஞானசம்பந்தர் தெருவில் வசித்த பச்சையப்பன் என்பவர், தனது நிலத்துக்கு பட்டா வழங்கக் கோரி அளித்த மனுவை பரிசீலிக்கும்படி மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்த போது, இந்து சமய அறநிலையத் துறை தரப்பில், மனுதாரர் பட்டா கோரும் நிலம், திருவல்லீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமானது எனவும், அந்த நிலம் மீட்கப்பட்டுள்ளதாகவும், இதுசம்பந்தமாக அறநிலையத் துறை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மனுதாரர் ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த தகவல்களை இந்த வழக்கில் தெரிவிக்காமல், கோவில் நிலத்தை அபகரிக்கும் நோக்கில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த விளக்கத்தை ஏற்றுக் கொண்டு, வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி, உண்மை தகவல்களை உள்நோக்கத்துடன் மறைத்து வழக்கு தொடர்ந்ததற்காக மனுதாரருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, அத்தொகையை ஆகஸ்ட் 27ம் தேதிக்குள் பாடி திருவல்லீஸ்வரர் கோவிலுக்கு செலுத்த உத்தரவிட்டார்.

The post உண்மை தகவல்களை மறைத்து வழக்கு தொடர்ந்தவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: