நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முதல்வர் ரங்கசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்: நாராயணசாமி வலியுறுத்தல்

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் நீட் தேர்வை ரத்து செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை முதல்வர் ரங்கசாமி உடனடியாக எடுக்க வேண்டும் என்று அம்மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சருக்கு நான் கடிதம் எழுதியது மட்டுமல்லாமல் சட்டப்பேரவையில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பினோம்.

ஆனால் அதை ஒன்றிய அரசு கண்டு கொள்ளவில்லை. தமிழகத்தில் மட்டும் இதுவரை 30-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். புதுச்சேரியில் ஹேமசந்திரன் என்ற மாணவர் தற்போது தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார். நரேந்திர மோடி அரசுக்கு ஹேமச்சந்திரன் உட்பட தமிழகத்தில் தற்கொலை செய்து இறந்த மாணவ மாணவிகள் உடைய இறப்பையும் கருத்திலே கொண்டு உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

இல்லையென்றால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தபிறகு கண்டிப்பாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும். அது மட்டுமல்ல புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி மாணவர் ஹேமச்சந்திரன் இறந்த விஷயத்தில் மௌனம் காக்கிறார். நீட் தேர்வை பற்றி என். ஆர். காங்கிரஸின் நிலை குறித்து ரங்கசாமி விளக்க வேண்டும். முதல்வர் ரங்கசாமி புதுச்சேரி மாநிலத்தில் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று அவரது கூட்டணியில் இருக்கின்ற பாஜக-வின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி புதுச்சேரி மாநிலத்தில் நீட் தேர்வை ரத்து செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாஜக கூட்டணி ஆட்சி வந்தால் புதுச்சேரியில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்படும் என்று பிரதமர் மோடி புதுச்சேரி மாநில மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி பொய்யானது. ஆட்சிக்கு வந்தபிறகு மக்களை வஞ்சிக்கின்ற அரசாக புதுச்சேரி அரசு செயல்பட்டு வருகிறது. புதுச்சேரியில் உள்ள என் பாஜக கூட்டணி ஆட்சி வெகு காலம் நீடிக்காது” என்று தெரிவித்துள்ளார்.

The post நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முதல்வர் ரங்கசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும்: நாராயணசாமி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: