ஒவ்வொரு இவிஎம்-ல் பதிவான வாக்குகள் எண்ணி முடித்த பிறகு அனைத்து முகவர்களும் சரிபார்த்த பிறகே அடுத்த இயந்திரத்தை எண்ண வேண்டும் : தேர்தல் ஆணையம்

டெல்லி :மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு 10 அம்ச ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படும் நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தனர். அவர்கள் பேசும் போது,”நாளை நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கைக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை இடைவிடாது சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்படும்.வாக்கு எண்ணிக்கை செயல்முறை முற்றிலும் வலுவானது மற்றும் துல்லியமானது.

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு 10 அம்ச ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கையின்போது தபால் வாக்குகள் முதலில் எண்ணத் தொடங்கப்படும். தபால் வாக்குகளை எண்ணத் தொடங்கி 30 நிமிடங்களுக்கு பிறகே, EVM வாக்குகள் எண்ணப்படும். வாக்கு எண்ணிக்கையில் இவிஎம்-ல் பதிவான வாக்கு எண்ணிக்கையும் 17 சி படிவத்தில் உள்ள எண்ணிக்கையையும் சரிபார்க்கும்படி அறிவுறுத்தி உள்ளோம். வாக்குப்பதிவு தொடங்கிய நேரம், முடிந்த நேரத்தை கட்டுப்பாட்டு இயந்திரத்தில் சரிபார்க்கும்படி அறிவுறுத்தியுள்ளோம்.

ஒவ்வொரு வாக்கு இயந்திரத்தையும் தனி அடையாள எண், சீல்களை சரிபார்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையின்போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளோம். ஒவ்வொரு வேட்பாளருக்கும் பதிவான வாக்குகளை எண்ணும் முன் மொத்த வாக்குகளை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த உடன் படிவம் எண் 20-ஐ தேர்தல் பார்வையாளர்கள் சரிபார்த்து கையெழுத்திடுவார்கள். வெற்றிக்கான வாக்கு வித்தியாசத்தை விட அதிகமாக தபால் வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தால் அது மீண்டும் சரிபார்க்கப்படும். ஒவ்வொரு இவிஎம்-ல் பதிவான வாக்குகள் எண்ணி முடித்த பிறகு அனைத்து முகவர்களும் சரிபார்த்த பிறகே அடுத்த இயந்திரத்தை எண்ண வேண்டும்,”இவ்வாறு தெரிவித்தனர்.

The post ஒவ்வொரு இவிஎம்-ல் பதிவான வாக்குகள் எண்ணி முடித்த பிறகு அனைத்து முகவர்களும் சரிபார்த்த பிறகே அடுத்த இயந்திரத்தை எண்ண வேண்டும் : தேர்தல் ஆணையம் appeared first on Dinakaran.

Related Stories: