பள்ளி, கல்லூரி, பல்கலை.யில் சுற்றுச்சூழல் கல்வி கட்டாயம்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: பள்ளி, கல்லூரிகளில் சுற்றுச்சூழல் கல்வியை கட்டாயம் கற்பிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழக வனப்பகுதியில் மின்வேலி மற்றும் மனிதர்கள் தாக்குதலால் யானைகள் உயிரிழப்பதை தடுக்கக் கோரி பாலு ராஜசேகரன் என்பவர், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: வனப்பகுதிகளில் மின்வேலி மற்றும் மனித தாக்குதல்களால் யானைகள் மற்றும் பிற வன விலங்குகள் கொல்லப்படுவதை தடுக்க உச்ச நீதிமன்றம் ஏற்கனவே பல்வேறு வழிகாட்டுதல்களை பிறப்பித்துள்ளது.

அதில் திரையரங்குகளுக்கு உரிமம் வழங்கும்போது சுற்றுச்சூழல் மற்றும் மாசுபடுவதை தடுப்பது குறித்து அனைத்து திரையரங்குகளிலும் ஸ்லைட் ஷோ நடத்த வேண்டும். இந்த நிபந்தனையை பின்பற்றாத திரையரங்குகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். இதேபோல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மக்களை கவரும் வகையில் குறும்படங்களை தயாரித்து திரையரங்குகளில் ஒளிபரப்ப வேண்டும். பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் சுற்றுச்சூழல் கல்வியை கட்டாயம் கற்பிக்க வேண்டும். இதற்காக பல்கலைக்கழக மானியக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்லூரி கல்வியில் ஒவ்வொரு நிலையிலும் சுற்றுச்சூழல் கல்வி கட்டாயம் கற்பிப்பதற்கான வாய்ப்புகளை பரிசீலிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. உச்சநீதிமன்றம் சுற்றுச்சூழல் மற்றும் மாசுபடுதலை தடுக்க உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் அடிப்படையில் மனிதர்களுக்கு அடிப்படையான வனம், ஏரி, ஆறு, வனவிலங்கு சரணாலயங்களில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதும், வன உயிரினங்கள் மீது கருணை காட்டுவதும் ஒவ்வொருவரின் கடமையாகும்.

இந்த தீர்ப்பின் அடிப்படையில் வனவிலங்குகளை பாதுகாக்கவும், வனப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்குமாறு, அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளர் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளனர்.

The post பள்ளி, கல்லூரி, பல்கலை.யில் சுற்றுச்சூழல் கல்வி கட்டாயம்: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: