×

அமலாக்கத்துறையின் 93% வழக்குகள் எதிர்க்கட்சிகள் மீது தான் தண்டனை விகிதம் 2% கூட இல்லை என்பது அவமானம்: செல்வப்பெருந்தகை அறிக்கை

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்ட அறிக்கை: பா.ஜ எப்போதுமே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீது ஆதாரமற்ற ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வந்தது. அப்படி கூறப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் ஒன்றுதான் 2010ல் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் குறித்ததாகும். 2016ல் அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் பிரிவு 3ன் கீழ் பண மோசடி மற்றும் பணபரிமாற்றம் நடைபெற்றதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.

ஆனால், அந்த முதல் தகவல் அறிக்கையின்படி கடந்த 9 ஆண்டுகளில் எந்த குற்றச்சாட்டையும் நிரூபிக்க போதிய ஆவணங்களை திரட்ட முடியவில்லை. இதை அமலாக்கத்துறையே தில்லி நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதி சஞ்ஜீவ் அகர்வால் முன்னிலையில் எடுத்துக் கூறி, வழக்கை முடிக்க முடிவு அறிக்கையை சமர்ப்பித்தது. அதன்படி நீதிமன்றம் சுரேஷ் கல்மாடி உள்ளிட்டவர்கள் மீது கூறிய குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அமலாக்கத்துறை தவறி விட்டதாகக் கூறி அனைவரும் நிரபராதிகள் என தீர்ப்பு கூறியது.

இது பா.ஜ.வின் அவதூறான ஊழல் அரசியலின் மீது விழுந்த மிகப்பெரிய சம்மட்டி அடியாகும். அமலாக்கத்துறை தொடுக்கிற வழக்குகளில் 93 சதவிகிதம் எதிர்க்கட்சிகள் மீது தான் தொடுக்கப்படுகின்றன. இதில் தண்டனை விகிதம் 2 சதவிகிதம் கூட இல்லை என்பதை விட, அமலாக்கத்துறைக்கு அவமானம் வேறு எதுவும் இருக்க முடியாது. இதன்மூலம் அமலாக்கத்துறையின் நோக்கமே எதிர்கட்சிகளை பழிவாங்குவற்குத் தான் என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை. இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

The post அமலாக்கத்துறையின் 93% வழக்குகள் எதிர்க்கட்சிகள் மீது தான் தண்டனை விகிதம் 2% கூட இல்லை என்பது அவமானம்: செல்வப்பெருந்தகை அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Enforcement Directorate ,Selvaperundhagai ,Chennai ,Tamil Nadu ,Congress ,BJP ,Commonwealth Games ,Dinakaran ,
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி...