சுதந்திர தினத்தையொட்டி‘என் மண், என் தேசம்’ இயக்கம் தொடங்கப்படும்: பிரதமர் மோடி அறிவிப்பு

புதுடெல்லி: ‘நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தோரை கவுரவிக்கும் வகையில், சுதந்திர தினத்தையொட்டி, ‘என் மண், என் தேசம்’ இயக்கம் தொடங்கப்படும்’ என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். பிரதமர் மோடி, அகில இந்திய வானொலியில் தனது ‘மன் கி பாத்’ மாதாந்திர நிகழ்ச்சியில் நேற்று பேசியதாவது: நாடு சுதந்திரம் அடைந்து, 75 ஆண்டு நிறைவடைந்ததை ஒட்டி, நாம் அனைவரும் சுதந்திர அமுதப் பெருவிழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இதைத் தொடர்ந்து வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தையொட்டி, தேசத்தின் மேலும் ஒரு இயக்கம் தொடங்கப்பட இருக்கிறது. அது, நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களை கவுரவிப்பதற்கான ‘என் மண், என் தேசம்’ இயக்கமாகும்.

இதன்படி நாடெங்கிலும் உயிர்த்தியாகம் செய்த வீரர்களை போற்றும் வகையில் பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும். இந்த இயக்கத்தின்படி, நாடு முழுவதும் அமுத கலச யாத்திரை மேற்கொள்ளப்படும். கிராமம் தோறும், பட்டி தொட்டிகளிலிருந்தும், 7500 கலசங்களில் மண் நிரப்பப்பட்டு, இந்த அமுதக்கலச யாத்திரை டெல்லியை வந்தடையும். இதில், நாட்டின் பல பகுதியில் இருந்து மண்ணோடு சேர்ந்து செடிகள் கொண்டு வரப்பட்டு, தேசியப் போர் நினைவுச் சின்னம் அருகில் அமுதப்பூங்காவனம் அமைக்கப்படும். இந்த அமுதப்பூங்காவனம், ஒரே பாரதம் உன்னத பாரதத்தின் உன்னத அடையாளமாக இருக்கும்.

கடந்த ஆண்டு சுதந்திர தினத்தை போலவே, இம்முறையும் வீடுகள்தோறும் மூவர்ணக் கொடியை ஏற்றுங்கள். இந்த பாரம்பரியத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இதன் மூலம், நமது கடமைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படும், சுதந்திரத்தின் மதிப்பு பற்றிய உணர்வு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

* 4,000 பெண்கள் ஹஜ் யாத்திரை
ஹஜ் பயணம் குறித்து பேசிய பிரதமர் மோடி, ‘‘இந்த முறை புனித ஹஜ் யாத்திரையை, எந்த ஒரு ஆணின் துணையும் இல்லாமல் பெண்கள் நிறைவு செய்திருக்கிறார்கள். அவர்களின் எண்ணிக்கை ஏதோ 50, 100 அல்ல. 4,000க்கும் அதிகம். இது மிகப்பெரிய மாற்றம். முதலில், இஸ்லாமியப் பெண்கள் மெஹ்ரம் அதாவது ஆண் துணை இல்லாமல் ஹஜ் புனிதப்பயணம் மேற்கொள்ள அனுமதி இல்லாமல் இருந்தது. இதற்காக சவுதி அரசுக்கு எனது இதயப்பூர்வ நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.

The post சுதந்திர தினத்தையொட்டி‘என் மண், என் தேசம்’ இயக்கம் தொடங்கப்படும்: பிரதமர் மோடி அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: