×

இமானுவேல் சேகரன் மணிமண்டபம் பணி அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடாது: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து

மதுரை: ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை சேர்ந்த குணசேகரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘பரமக்குடியில் இமானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தின் ஆர்ஜித நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து, பொதுமக்கள் பணத்தில் மணி மண்டபம் கட்டும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இதை எதிர்த்து விடுதலைக்களம் கட்சி தலைவர் ராஜ்குமார், மூவேந்தர் புலிப்படை தலைவர் பாஸ்கர், மாவீரன் சுந்தரலிங்கம் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன், தேவேந்திரகுல வேளாளர் சட்ட பாதுகாப்பு மைய துணைச் செயலாளர் வீரபாண்டியன் மற்றும் மானகிரி வழக்கறிஞர் செல்வக்குமார் உள்ளிட்டோர் தரப்பில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரியா கிளெட் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தன.

கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆஜராகி, ‘‘மணிமண்டபம் கட்டுமான பணிகள் 90 சதவீதம் நடந்துள்ளது. முடியும் நிலைக்கு வந்து விட்டன. அரசின் கொள்கை சார்ந்த முடிவுகளை எதிர்த்து தனிநபர் பொதுநல வழக்கு தொடர முடியாது. பொதுமக்களின் வசதிக்காக பரமக்குடியில் 3 இடங்களில் மார்க்கெட் உள்ளது. இங்கு எதுவும் இல்லை’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், ‘‘அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடாது. மணிமண்டபம் கட்டுவது தொடர்பான அரசின் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை டிச. 19க்கு தள்ளி வைத்தனர்.

The post இமானுவேல் சேகரன் மணிமண்டபம் பணி அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடாது: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து appeared first on Dinakaran.

Tags : Emanuel ,Sekaran Mani Mandapam Mission Court ,ICourt Branch ,Madurai ,Gunasekaran ,Ramanathapuram district ,Kamuthi ,Court of Appeal ,Emanuel Shekaran ,Paramakkudi ,Dinakaran ,
× RELATED கட்சி கொடி மரங்களை ஏன் அகற்ற கூடாது?: ஐகோர்ட் கிளை கேள்வி