ஆம்பூர் அருகே துருகம் காப்புக்காட்டில் யானையை கொன்று தந்தங்கள் கடத்தல்

*அழுகிய நிலையில் சடலம் மீட்பு

ஆம்பூர் : ஆம்பூர் அருகே துருகம் காப்புக்காட்டில் உடல் அழுகிய நிலையில் யானை மீட்கப்பட்டது. அதன் தந்தங்கள் வெட்டி கடத்தப்பட்டுள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.தமிழக- ஆந்திர மாநில எல்லையையொட்டி சுமார் 1,000 ஏக்கர் பரப்பளவில் அடந்த காடுகள் அமைந்து உள்ளது. குறிப்பாக, ஆந்திர மாநிலம், கவுண்டன்யா காட்டையொட்டி தமிழகத்தில் திருப்பத்தூர் மாவட்டத்தில் பேரணாம்பட்டு, ஆம்பூர், சாரங்கல், துருகம், காரப்பட்டு, வாணியம்பாடி உட்பட பல்வேறு வனப்பகுதிகள் அமைந்து உள்ளது.

இந்த காட்டில் அரியவகை மூலிகைகள் மட்டுமன்றி வனவிலங்குகளும் அதிக அளவில் வாழ்கின்றன. குறிப்பாக, மான், யானை, சிறுத்தை, மலைப்பாம்பு, காட்டுப்பன்றி உட்பட பல்வேறு வனவிலங்குகளின் வாழ்விடமாக இந்த அடர்ந்த காடுகள் உள்ளன.இந்நிலையில், தமிழக- ஆந்திர எல்லை பகுதிகளில் கடந்த சில மாதங்களாக யானை கூட்டம் சுற்றித்திரிந்து வருகிறது. ஆந்திர மாநிலம் கவுண்டன்யா காடுகள், தமிழகத்தில் பேரணாம்பட்டு வனச்சரகத்திற்குட்பட்ட சாரங்கல் காப்புக்காடு, ஆம்பூர் வனச்சரகத்திற்குட்பட்ட மாச்சம்பட்டு, துருகம் காப்புக்காடுகளில் இந்த யானை கூட்டம் சுற்றித்திரிந்து வருகின்றன.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆந்திர மாநில எல்லையோர காட்டுப்பகுதியில் ஆண் யானை ஒன்று இறந்து கிடப்பதாகவும், அந்த யானையின் தந்தம் வெட்டி எடுக்கப்பட்டு உள்ளதாகவும் அம்மாநில வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், ஆந்திர மாநில வனத்துறையினர் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினர். ஆனால், எதுவும் கிடைக்காததால் அந்த யானை தமிழக எல்லை பகுதியில் இறந்து கிடக்கலாம் என கருதினர்.

உடனே இந்த தகவலை பேரணாம்பட்டு வனச்சரக அலுவலகத்திற்கு தெரிவித்தனர். அதன்பேரில் வன ஊழியர்கள் சாரங்கல் உட்பட எல்லையோர வனப்பகுதிகளில் நேற்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, மலை காட்டில் பல இடங்களில் தேடியும், அங்கும் யானையின் உடல் இல்லை என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, ஆம்பூர் வனச்சரக அலுவலர் பாபு தலைமையில் 15 பேர் அடங்கிய குழுவினர் ஆம்பூர் வனச்சரகம் துருகம் காப்புக்காடு, பேரணாம்பட்டு வனச்சரகம் சாரங்கல் காப்புக்காட்டை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ஆம்பூர் வனச்சரகம் துருகம் காப்புக்காடு பொட்டல் ஊட்டல் பகுதிக்கு சற்று தொலைவில் அழுகிய நிலையில் யானையின் சடலம் எலும்புக்கூடாகி கிடப்பதை கண்டறிந்தனர். அந்த யானை இறந்து சில நாட்கள் ஆகியிருக்கலாம் என கூறப்படுகிறது. யானையின் தந்தங்கள் எடுக்கப்பட்டிருப்பது சடலத்தில் தெரிய வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து உதவி வனபாதுகாவலர் வினோத் ராஜ் முன்னிலையில் கால்நடை மருத்துவர்கள் ராஜ்குமார், இளவரசன் தலைமையிலான மருத்துவர்கள் யானை இறந்து கிடந்த இடத்திலேயே அதன் சடலத்தை பிரேத பரிசோதனை செய்தனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ரகசிய தகவலின்பேரில் யானை சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ளபட்டது. வயது முதிர்வு காரணமாக யானை இறந்திருக்கலாம். பெண் யானையாக இருக்க வாய்ப்புள்ளது என்றனர். இந்நிலையில், இறந்த கிடந்த யானை ஆண் யானையா? அல்லது பெண் யானையா? வயது முதிர்வு காரணமாக இறந்ததா? அல்லது தந்தத்திற்காக யானை கொல்லப்பட்டதா? என பலர் கேள்வி எழுப்பியுள்ள நிலையில் இதுகுறித்து வனத்துறை உயரதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டுமென இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வனப்பகுதியில் தீவிர ரோந்து

ஆம்பூர் வனச்சரக எல்லைேயாரம் வசிக்கும் கிராம மக்கள் கூறுகையில், இந்த காப்புக்காடுகளில் பல்வேறு வகையான வனவிலங்குகள், அரிய வகை மரங்கள், புதர்கள், மூலிகைச்செடிகள் உள்ளன. ஆனால், இந்த வனப்பகுதிகளில் வன ஊழியர்கள் ரோந்து செல்வதில்லை. அவ்வாறு சென்று இருந்தால் யானையின் சடலத்தை அழுகும் நிலையில் மீட்டு இருக்க வேண்டிய நிலை இருந்திருக்காது.

வனப்பகுதிக்குள் ரோந்து செல்வதால் மர்ம நபர்கள் நடமாட்டத்தையும் கட்டுப்படுத்த இயலும் என்றனர். ஆனால், இதுகுறித்து வனஊழியர்களிடம் கேட்டபோது, ‘ஆம்பூர் வனச்சரகத்தில் பெரும்பான்மையான பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால் ஏற்கெனவே பணியில் உள்ளவர்கள் பெரும் பணிச்சுமைக்கு ஆளாக நேரிடுகிறது’ என்றனர்.

The post ஆம்பூர் அருகே துருகம் காப்புக்காட்டில் யானையை கொன்று தந்தங்கள் கடத்தல் appeared first on Dinakaran.

Related Stories: