×

கடந்த 6 ஆண்டுகளாக எந்த தேர்தலிலும் போட்டியிடாத தமிழகத்தை சேர்ந்த 24 கட்சிகளுக்கு நோட்டீஸ்: முதற்கட்டமாக 345 கட்சிகளை நீக்க முடிவு, இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை

சென்னை: கடந்த 6 ஆண்டுகளாக எந்த தேர்தலிலும் போட்டியிடாத ‘அப்பா அம்மா மக்கள் கழகம்’ உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 24 கட்சிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 2019 முதல் கடந்த 6 ஆண்டுகளாக ஒரு தேர்தலிலாவது போட்டியிட வேண்டும் என்ற முக்கிய நிபந்தனையை நிறைவேற்ற பல கட்சிகள் தவறியுள்ளன. மேலும் அந்த கட்சிகள் இருப்பிடத்தை கண்டறிய முடியாத கட்சிகள் என்பதால் 345 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை முதற்கட்டமாக பட்டியலிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.

இதற்கான நடவடிக்கையை, இந்திய தேர்தல் ஆணைய தலைவர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையாளர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் தலைமையில் தொடங்கியுள்ளனர். 2,800க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளில் பல கட்சிகள் பதிவுசெய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளாக தொடர தேவையான நிபந்தனைகளை பூர்த்தி செய்யாதது தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. அந்த வகையில், 345 கட்சிகளை தேர்தல் ஆணையம் அடையாளம் கண்டுள்ளது.

பதிவு செய்யப்பட்ட அந்தந்த கட்சிகளின் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு அந்த கட்சிகளுக்கு விளக்கம் கூற நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. விளக்கத்துக்கு 21 நாட்களுக்குள் பதில் தரவில்லை என்றால் அவற்றின் பதிவு ரத்து செய்யப்படும். இந்த பட்டியல் நீக்க நடவடிக்கை அரசியல் பதிவை தவறாகப் பயன்படுத்துவதை தடுப்பதற்கு உறுதுணையாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் 24 கட்சிகளின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக, தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது : மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951ன் பிரிவு 29ஏ கீழ் அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன்படி ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட பிறகு வருமான வரியிலிருந்து விலக்கு, அங்கீகாரம், சின்னங்கள் ஒதுக்கீடு, நட்சத்திர பிரசாரகர்கள் நியமனம் உள்ளிட்ட விவரங்கள் பெறப்படும். மேலும் ஒரு தேர்தலில் கூட போட்டியிடாத அரசியல் கட்கிகள் நீக்கப்பட உள்ளது. இதற்கான முதற்கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, அகில இந்திய ஆதித்தனார் மக்கள் கட்சி, அகில இந்திய பெண்கள் ஜனநாயக சுதந்திர கட்சி, அம்பேத்கர் மக்கள் இயக்கம், அனைத்திந்திய சமுதாய மக்கள் கட்சி, அண்ணா எம்ஜிஆர் ஜெயலலிதா திராவிட முன்னேற்ற கழகம், அப்பம்மா மக்கள் கழகம், தேச மக்கள் முன்னேற்ற கழகம், காமராஜர் மக்கள் கட்சி, இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி, இந்திய வெற்றிக்கட்சி, மக்கள் நீதிகட்சி மீனவர்கள் மக்கள் முன்னணி, பசும்பொன் மக்கள் கழகம், சமூக மக்கள் கட்சி, தமிழ் மாநில கட்சி உள்ளிட்ட 24 கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்காத கட்சிகள் பட்டியலிருந்து நீக்கம் செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post கடந்த 6 ஆண்டுகளாக எந்த தேர்தலிலும் போட்டியிடாத தமிழகத்தை சேர்ந்த 24 கட்சிகளுக்கு நோட்டீஸ்: முதற்கட்டமாக 345 கட்சிகளை நீக்க முடிவு, இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Election Commission of India ,Chennai ,Appa Amma Makkal Kazhagam ,Dinakaran ,
× RELATED வேலூர் பொற்கோயிலில் ஜனாதிபதி சுவாமி தரிசனம்