‘எல்லாமே எடப்பாடிதான் பேசுவார்…’ சைலண்ட் மோடிற்கு சென்றார் செல்லூர் ராஜூ

மதுரை:

இடைவிடாமல் கேள்வி கேட்ட நிருபர்களிடம், ‘எல்லாத்துக்கும் எடப்பாடி பழனிசாமிதான் பதில் கூறுவார்’ என ஒரே பதிலை கூறி எஸ்கேப் ஆனார் செல்லூர் ராஜூ. மதுரை பழங்காநத்தம் பகுதியில் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நியாய விலைக்கடை மற்றும் பேவர் பிளாக் சாலை அமைக்கும் திட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று அடிக்கல் நாட்டினார். அப்போது அவரிடம் நிருபர்கள், ‘கூட்டணியில் பிரிவு ஏற்பட்டுள்ளதே?’ என்றனர், ‘‘அரசியல் குறித்து நான் பேச விரும்பவில்லை. அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அரசியல் கருத்துகளை ஊடகத்தில் தெரிவிக்க கூடாது என அறிவுறுத்தி உள்ளனர். தொகுதி வளர்ச்சி, மேம்பாடு குறித்து ஊடகத்தில் பேசுவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கூட்டணி மற்றும் அரசியல் கருத்துகளை எல்லாம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுவார். அதிமுகவின் நிலைப்பாட்டுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என்றார். அவரிடம், ‘அதிமுக தனித்து நின்று 40க்கு 40 தொகுதியில் வெற்றி பெறுமா?’ எனக் கேட்டனர். அதற்கு, ‘உங்களது ஆலோசனையை எடப்பாடி பழனிசாமி இடம் கூறுகிறேன். அவர்தான் முடிவெடுப்பார்…’ என்றார். ‘சென்னை பயணத்திற்கு பிறகு அமைதியாகி விட்டீர்களே?’ என்ற கேள்விக்கு, ‘ஹஹ்ஹஹ்ஹா..’ என்ற வழக்கமான சிரிப்பை உதிர்த்த செல்லூர் ராஜூவிடம், ‘கூட்டணி முறிவை மக்கள் நம்ப மாட்டேன் என்கிறார்கள். கிடைக்கும் எம்பிக்களுடன் போய்விடுவீர்கள் என்கிறார்களே?’ என்றதும், ‘எல்லாவற்றிற்கும் பொதுச்செயலாளர் தான் பதில் பேசவேண்டும்.. காலம் வரும்’ என்று சமாளித்தபடியே கிளம்பிச் சென்றார்.

The post ‘எல்லாமே எடப்பாடிதான் பேசுவார்…’ சைலண்ட் மோடிற்கு சென்றார் செல்லூர் ராஜூ appeared first on Dinakaran.

Related Stories: