வறட்சியிலும் விளைந்த முண்டு மிளகாய்

ராமநாதபுரம் மாவட்டத்தின் முக்கிய விவசாயப் பயிராக நெல் இருந்தாலும் நெல்லுக்கு அடுத்தப்படியாக மிளகாய் சாகுபடிதான் அதிகளவு உள்ளது. தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மிளகாயின் அளவு 28 ஆயிரம் டன் க்கும் மேல். இதில் பாதி அளவு ராமநாத புரத்தில் இருந்து கிடைப்பதால் மிளகாய் உற்பத்தியில் முதன்மையான மாவட்டமாக ராமநாதபுரம் இருக்கிறது. மாவட்டம் முழுவதும் 1 லட்சம் விவசாயிகள் மிளகாய் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். மன்னர்கள், ஆங்கிலேயர்கள் காலம் தொட்டே பாரம்பரியமாக பயிரிட்டு வருவதால் இந்த மிளகாய் ராம்நாடு முண்டு என அழைக்கப்படுகிறது.

மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் சம்பா மிளகாயும்(குச்சி), கிழக்குப் பகுதியில் முண்டு எனப்படும் குண்டுமிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது. சம்பாவை விட அதிக எண்ணிக்கையில் மகசூல் தரக்கூடியது குண்டு மிளகாய். அடர்ந்த சிவப்பு நிறத்தில், ருசி, அதிக காரத்தன்மை, மருத்துவக் குணங்களோடு இயற்கையில் அமைந்துள்ளது. மிளகாய்த்தூள் உற்பத்தியாளர்களுக்கு இடையே ராம்நாடு முண்டு எனப்படும் இந்த குண்டு மிளகாய் ரகத்துக்கு உலக அளவில் நல்ல கிராக்கி இருக்கிறது. இந்த வருடம் மட்டும் கமுதியை சேர்ந்த மிளகாய் விவசாயி ராமரிடம் ஜெர்மனி நிறுவனம் 100 டன் மிளகாய் ஏற்றுமதிக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறது.

ஏற்றுமதியாகும் மிளகாய் வத்தலை கொண்டு தயாரிக்கப்படுகின்ற மிளகாய்த்தூள், மிளகாய் சாஸ், மிளகாய் எண்ணெய், ஊறுகாய் வகைகள் உள்ளிட்ட மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, இலங்கை, சீனா, அமெரிக்கா ஐக்கிய நாடுகள் மற்றும் சவூதி அரேபியா, துபாய், கத்தார் போன்ற அரபு நாடுகள், இந்தியர்கள் குறிப்பாக, தமிழர்கள், கேரளா, ஆந்திரா, கர்நாடக, தெலுங்கானா உள்ளிட்ட தென் மாநிலத்தவர் அதிகமாக வாழக்கூடிய நாடுகளில் அதிக வரவேற்பு உள்ளது.

அந்த வகையில் மாவட்டத்தில் 47ஆயிரம் ஏக்கரில் மானாவாரியாகவும், 5ஆயிரம் ஏக்கரில் இறைவை சாகுபடியாகவும் மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது. அருகிலுள்ள சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இளையான்குடி, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த விளாத்திக்குளம், விருதுநகர் மாவட்டம் பரளச்சி பகுதிகள் ஆகியவை ராமநாதபுரம் சந்தையில் சேர்வதால், மாவட்ட அளவில் ஆண்டிற்கு சுமார் 15ஆயிரம் டன் வரை காய்ந்த முண்டு மிளகாய் கிடைக்கிறது.

பரமக்குடி, நயினார்கோயில், ஆர்.எஸ்.மங்கலம், முதுகுளத்தூர் பகுதியில் விளைவிக்கப்படும் இந்த மிளகாய் அதிக காரத்தன்மையுடன் இருப்பதால் தமிழகத்தில் மிளகாய் சாகுபடியில் தனித்தன்மை பெற்று முதலிடத்தில் இருக்கிறது. காய்கறி விற்பனை, சமையல் காய் பயன்பாட்டிற்கு பறிப்பது கிடையாது. வத்தல் பயன்பாட்டிற்காக பழுத்த நிலையில் மட்டுமே பறிக்கப்படுகிறது தேரிருவேலி விவசாயி கோகிலா கூறும்போது:“செப்டம்பர் மாதக் கடைசியில் பருவமழை துவங்கும். இதனை எதிர்பார்த்து முன்கூட்டியே கிராமங்களில் நாற்றுப் படுக்கை அமைக்கப்படும், அதில் ஆட்டுப் புழுக்கை, மாட்டு எரு உள்ளிட்ட இயற்கை உரத்தை போட்டு, கரம்பை மண், மணல் பாங்கான மண் ஆகியவை போட்டு தயார்படுத்துவோம், ஆகஸ்ட் மாதத்தில் பெய்யும் சிறு மழைக்கு மிளகாய் விதைகளை நெருக்கமாக விதைத்து கோழி உள்ளிட்ட பறவைகள் கொத்தி தின்றுவிடக்கூடாது என்பதற்காக கொளுஞ்சிச் செடியை கொண்டு
மூடிவிடுவோம்.

அந்த ஈரப்பதத்திற்கு நாற்று முளையிட்டு வளரத் தொடங்கியவுடன், குடத்தில் தண்ணீர் எடுத்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் தெளிப்பான் முறையில் தெளித்து வளர்க்கப்படும், ஒரு ஏக்கருக்கு 15 முதல் 20 கட்டு நாற்றுகள் கிடைக்கும். இவை எங்கள் பயன்பாட்டிற்கு போக மீந்தவற்றை வெளியூர் விவசாயிகளுக்கும் விற்கப்படுகிறது. வைகைப் பாசன சங்கத் தலைவர் பாக்கியநாதன் கூறும்போது,“ராம்நாடு முண்டு மிளகாய்க்கு ஜி.ஐ ரெஜிஸ்ட்ரி என்ற சிறப்பு முத்திரை, அதாவது புவீசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து விலை நிர்ணயம் செய்வர். இதனால் விலை வீழ்ச்சியடையும், இந்த நிலையில் புவீசார் குறியீடு கிடைத்துள்ளதால் வணிகரீதியாகவும், தொழில்ரீதியிலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு இடைதரகர்கள் இன்றி, நேரடியாக விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும். விவசாயிகள், மாவட்டத்திற்கு நல்ல வளர்ச்சி ஏற்படும். நமது மாநிலம், நாட்டிற்கு அன்னிய செலாவாணியை ஈட்டித் தரும்.”

45 பொருட்கள் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி

ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சேர்ந்த தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு புவிசார் குறியீடு என்பது வழங்கப்படுகிறது. இந்தியாவில் தனித்தன்மை வாய்ந்த பொருட்கள் தொடர்பான புவிசார் குறியீடு பதிவுகள் மற்றும் பாதுகாப்பிற்கு இச்சட்டம் பொருந்துகிறது. இதன்மூலம் ஒரு பொருளை வேறு யாரும் வியாபார நோக்கத்தோடும், போலியாக வேறு பெயரில் பயன்படுத்துவதை தடுக்கமுடியும். நம்ம ஊர் பொருட்களை எவ்வித தடையின்றி வெளிநாடுகள் உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். இதனால் அன்னிய செலவாணியில் நமது சந்தையின் மதிப்பு பல மடங்கு உயர்ந்து, பொருளாதார ஏற்றத்தை பெற்றுத் தர உதவுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் மதுரை மல்லிகைப் பூ, பழனி பஞ்சாமிர்தம், திண்டுக்கல் பூட்டு, வில்லிபுத்தூர் பால்கோவா என 43 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த மாதம் 44 வதாக வேலூர் முள்கத்தரி, 45வதாக ராமநாதபுரம் முண்டு மிளகாய்க்கு வழங்கப்பட்டுள்ளது.

கைகொடுத்த அரசு

ராமநாதபுரம் மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் மிளகாய் வணிக வளாகம் கட்டப்பட்டது. 2ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன கிடங்கு செயல்
படுகிறது. இத்துடன் 13 கோடியில் கட்டப்பட்ட 65 வணிகக் கடைகளை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சமீபத்தில் திறந்துவைத்தார். ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

The post வறட்சியிலும் விளைந்த முண்டு மிளகாய் appeared first on Dinakaran.

Related Stories: