திராவிட மாடல் அரசின் கொள்கை எல்லார்க்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான்: மே தின விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: ஒரு அரசாங்கம் எப்படி செயல்பட வேண்டும் என்று நான் வகுத்த கொள்கைத் திட்டம் தான் இன்றைக்கு திராவிட மாடல் அரசாக அமைந்திருக்கிறது. எல்லார்க்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் நம்முடைய கொள்கை, அதுதான் நம்முடைய அடித்தளம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தொழிற்சங்கமான தொமுச பேரவை சார்பில் மே தின விழா நேற்று காலை சென்னை சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் நடைபெற்றது. இதில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மே தின நினைவு சின்னத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார்.

விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சோசலிச இயக்கத்தின் தலைவர்கள் 1889ம் ஆண்டு கூடி மே 1ம் நாளை தொழிலாளர் வர்க்க ஒருமைப்பாட்டு ஆர்ப்பாட்டத்திற்கான உலக நாளாக அறிவித்தார். சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் முயற்சியால் தமிழ்நாட்டில் சென்னை கடற்கரையில் 1923ம் ஆண்டு ‘மே நாள்’ முதன்முதலாகக் கொண்டாடப்பட்டது. பின்னர் சோவியத் சென்று வந்த தந்தை பெரியாரும் மே நாளைக் கொண்டாடத் தொடங்கினார். அனைவரையும் ‘தோழர்’ என்று அழைக்கச் சொன்னார். கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையை தமிழில் மொழிபெயர்த்து தந்தை பெரியார் தனது குடி
அரசு ஏட்டில் வெளியிட்டார். தந்தை பெரியாரும் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரும் இணைந்து செயல்பட்டார்கள். சுயமரியாதை உணர்வையும் – சமதர்மச் சிந்தனையையும் இணைத்தே தமிழ்நாட்டில் இயக்கம் நடந்திருக்கிறது.

திமுக ஆட்சியில் பாட்டாளி வர்க்கச் சிந்தனையே மேலோங்கி இருக்கும். நங்கவரம் விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்காகப் போராடியவர்தான் தலைவர் கலைஞர் என்பதை நாடு அறியும். தந்தை பெரியாரையும், அண்ணாவையும் நான் சந்தித்திருக்காவிட்டால் நான் ஒரு கம்யூனிஸ்டாக ஆகியிருப்பேன் என்று சொன்னவர் தலைவர் கலைஞர். தலைவர் கலைஞர் எனக்கு வைத்த பெயரே ஸ்டாலின். 1969ம் ஆண்டு நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் முதல்வராக பொறுப்பேற்றவுடனே தொழிலாளர் நலனுக்காகவே ஒரு நலத்துறையை உருவாக்கி தனி அமைச்சகத்தையே உருவாக்கினார். 1969ம் ஆண்டில் மே முதல் நாளைச் சம்பளத்தோடு கூடிய, ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை நாளாக அறிவித்து அதை சட்டமாகவும் இயற்றி தந்தார்.

தொழிலாளர்கள் ஓய்வு பெறுகிற போது அரசு ஊழியர்களுக்கு உள்ளது போல் “பணிக்கொடை” வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியதும் திமுக அரசு தான். விபத்துகளால் பாதிக்கப்படும் தொழிலாளர்களின் குடும்பங்களைக் காப்பதற்காகத் தொழில்-விபத்து நிவாரண நிதித் திட்டத்தை ஏற்படுத்தியதும் திமுக அரசு தான். கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்துடன் விவசாயத் தொழிலாளர் நல வாரியம், மீனவர் நலவாரியம் உள்ளிட்ட 36 அமைப்புசாரா நலவாரியங்களை உருவாக்கி தந்ததும் திமுக அரசு தான்.

1990ம் ஆண்டு மேதின நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிற நேரத்தில், இந்த நேப்பியர் பூங்காவிற்கு ‘மேதினப் பூங்கா’ எனப் பெயர் சூட்டியவரும் தலைவர் கலைஞர் தான். ஒரு அரசாங்கம் எப்படி செயல்பட வேண்டும் என்று நான் வகுத்த கொள்கைத் திட்டம் தான் இன்றைக்கு திராவிட மாடல் அரசாக அமைந்திருக்கிறது. எல்லார்க்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான் நம்முடைய கொள்கை, அதுதான் நம்முடைய அடித்தளம்.
தொழிலாளர் நல வாரியங்களில் முந்தைய ஆட்சியாளர்களால் தரப்படாமல் நிலுவையில் இருந்த 1 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் செய்து தரப்பட்டுள்ளன. இந்த இரண்டு ஆண்டு காலத்தில் 6 லட்சத்து 71 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டிருக்கிறது. 25க்கும் மேற்பட்ட தொழில்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தினை நிர்ணயித்து அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது.

10 ஆயிரம் தொழிலாளர்களுக்கு வீட்டு வசதித் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. 6 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் அமைப்பு சாராத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இவை போன்ற உதவித் தொகைகள் அனைத்தும் உயர்த்தி வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவை அனைத்துக்கும் மேலாக கடை மற்றும் நிறுவனங்களில் பணிபுரியக்கூடிய பணியாளர்களுக்கு இருக்கை வசதி ஏற்படுத்தித் தரவேண்டும் என்று சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. தனியார் நிறுவனங்கள் மூலம் 1 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பைப் பெற்றுத் தந்திருக்கிறோம். பத்தாம் வகுப்பு படித்தவர்கள் முதல் பொறியியல் பட்டதாரிகள் வரை வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டிருக்கிறது. இப்படி வேலைவாய்ப்பைப் பெற்றவர்களில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் இருக்கிறார்கள் என்பது தான் சமுதாயத்தினுடைய அடையாளமாக, சமூகநீதியினுடைய அடையாளமாக அமைந்திருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். திமுக ஆட்சியில் பாட்டாளி வர்க்கச் சிந்தனையே மேலோங்கி இருக்கும்.

The post திராவிட மாடல் அரசின் கொள்கை எல்லார்க்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதுதான்: மே தின விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: