மும்பை: பிரபல இந்தி நடிகர் நவாசுதீன் சித்திக். இவரது மனைவி ஜைனப். நவாசுதீனும் ஜைனப்பும் கருத்து வேறுபாட்டினால் பிரிந்தனர். நவாசுதீன் மற்றும் அவர் தாய் மீது ஜைனப் பல குற்றச்சாட்டுகளைக் கூறினார். நவாசுதீன் மீது சகோதரர் ஷம்சுதீன் பரபரப்பு புகார்களைத் தெரிவித்தார். தன் சகோதரர், மனைவி ஜெய்னப் ஆகியோருக்கு எதிராக ரூ.100 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது,ஷம்சுதீன் தரப்பு வக்கீல் கூறுகையில்,‘‘ நவாசுதீனுக்கும் ஜைனப்புக்கும் உள்ள கருத்து வேறுபாட்டை நீக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதனால், ஜைனப் மீதான வழக்கை தொடர நவாஸ்தீன் விரும்பவில்லை’’ என்றார்.
இதையடுத்து, ஷம்சுதீன் தரப்பு வக்கீல் வாதிடுகையில், ‘‘ சகோதரர்கள் இடையேயான மோதலில் நீதிமன்றம் தலையிட்டு தீர்வு காண வேண்டும்’’ என்றார். நவாசுதீனின் வக்கீல் வாதிடுகையில்,‘‘ நவாசுதீனை பற்றி சமூக வலைதளங்களில் பதிவிட்ட கருத்துகளை ஷம்சுதீன் நீக்கினால்தான் பேச்சுவார்த்தை குறித்து பரிசீலிக்க முடியும்’’ என்றார். இதையடுத்து குறுக்கிட்ட நீதிபதி சக்லா,‘‘ சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இரண்டு பேரும் ஒருவர் மீது ஒருவர் அவதூறான கருத்துகளை பதிவிடக்கூடாது. எனவே சமூக வலைதளங்களில் பதிவிட்ட சர்ச்சைக்குரிய கருத்துகளை நீக்க வேண்டும் என்று கூறிய நீதிபதி வரும் மே 3ம் தேதி 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளார்.
The post சமூக வலைதளங்களில் குடும்ப சண்டை குறித்து கருத்து பதிவிடக்கூடாது: பிரபல நடிகருக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.