×
Saravana Stores

நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் மகாராஷ்டிரா, ஜார்கண்ட் பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது: தலைவர்கள், வேட்பாளர்கள் சூறாவளி வாக்கு சேகரிப்பு


மும்பை: மகாராஷ்டிரா, ஜார்கண்ட்டில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் இன்றுடன் மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் சூறாவளி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். நாட்டின் வர்த்தக தலைநகர மாநிலமான மகாராஷ்டிராவில் வரும் 20ம் தேதி (நாளை மறுநாள்) ஒரே கட்டமாக சட்டப் பேரவை தேர்தல் நடக்கிறது. மாநிலத்தின் அடுத்த முதல்வராக யார் ஆள வேண்டும்? என மகாராஷ்டிரா மக்கள் தீர்மானிக்க இருக்கிறார்கள். ஆட்சியைத் தக்கவைக்க மகாயுதி கூட்டணியும், அதனைத் தட்டிப் பறிக்க மகா விகாஸ் அகாடி கூட்டணியும் தீவிரமாக களமாடி வருகின்றன. பாஜக, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் துணை முதல்வர் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ‘மகாயுதி கூட்டணி’யில் தேர்தலை சந்திக்கின்றன.

எதிர் தரப்பிலோ ‘இந்தியா’ கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணியில் களம் காண்கின்றன. வெளிப்படையாக பார்த்தால் இந்த தேர்தலில் பாஜக – காங்கிரஸ் இடையேயான இருமுனைப் போட்டி இருப்பதாக தெரிகிறது. ஆனால் இரு கூட்டணிகள் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. அதாவது, பாஜக – காங்கிரஸ், சிவசேனா – சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் என ஒவ்வொரு அணியிலும் பங்காளி சண்டை போல் தேர்தல் நடக்கிறது. வித்தியாசமான இந்த தேர்தல் களத்தில் ஒரே கட்டமாக ெமாத்தமுள்ள 288 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடப்பதால் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் கார்கே, எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் பொதுச் ெசயலாளர் பிரியங்கா காந்தி போன்ற தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் மொத்தம் 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான ‘நீயா நானா’ போட்டியில் ஆளும் மகாயுதி கூட்டணியில் பாஜக 149 இடங்களிலும், ஷிண்டே அணி சிவசேனா 81 இடங்களிலும், அஜித் பவாரின் என்சிபி 59 இடங்களிலும், பிற கட்சிகள் 6 இடங்களிலும் போட்டியிடுகின்றன. எதிர்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் காங்கிரஸ் 101 இடங்களிலும், உத்தவ் அணி சிவசேனா 95 இடங்களிலும், சரத் பவாரின் என்சிபி 86 இடங்களிலும், பிற கட்சிகள் 7 இடங்களிலும் போட்டியிடுகின்றன. இதில், பாஜக – காங்கிரஸ் 75 இடங்கள், சிவசேனா – சிவசேனா 53 இடங்கள், என்சிபி – என்சிபி 41 இடங்கள் என 169 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன. இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்வதால் தலைவர்கள் இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களின்படி மகாராஷ்டிராவில் 4.97 கோடி ஆண்கள், 4.66 கோடி பெண்கள் என மொத்தம் 9.63 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதிப் பெற்றுள்ளனர். ஊரகப் பகுதிகளில் 39,048 வாக்குச்சாவடிகள், நகர்ப்புறங்களில் 13,741 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 52,789 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 1,00,186 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு வாக்குச்சாவடிக்கு சராசரியாக 960 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தமுள்ள 288 எம்எல்ஏக்கள் பதவிக்கு மொத்தம் 4,136 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். பீட் மாவட்ட தொகுதியில் அதிகபட்சமாக 34 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கடந்த 2014 தேர்தலில் போட்டியிட்ட 4,119 வேட்பாளர்களுடன் ஒப்பிடும்போது, 2019 சட்டமன்றத் தேர்தலில் 3,237 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

அரசியல் பிரபலங்களான ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர ஃபட்னாவிஸ், அஜித் பவார், ரோஹித் பவார், நவாப் மாலிக், நானா படேல், உத்தவ் தாக்கரே, ஆதித்யா தாக்கரே, மிலிந்த் தியோரா, சந்திரசேகர் பவன்குலே, ஜீஷன் சித்திக், ஜயா சவான் மற்றும் அமித் தாக்கரே ஆகியோர் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில் இரு கூட்டணியிலும் யார் அடுத்த முதல்வர் வேட்பாளர்? என்று அதிகாரபூர்வமாக அறிவிக்காததால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  தற்போதைய நிலவரப்படி, மகா விகாஸ் அகாதி ஆட்சியைப் பிடிக்கும் எனவும், மகாயுதி மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் என்றும், தொங்கு அரசு அமையும் என்றும் கலவையான கருத்துக்கணிப்புகளே நிலவுகின்றன. ஜார்கண்டில் முதற்கட்டமாக கடந்த 13ம் தேதி 43 சட்டசபை தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.

இரண்டாவது கட்டமாக நாளை மறுநாள் (நவ. 20) 38 சட்டசபை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. மொத்தம் 528 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முதல்வர் ஹேமந்த் சோரன், முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டி, முன்னாள் துணை முதல்வர் சுதேஷ் மஹ்தோ, சட்டமன்ற சபாநாயகர் ரவீந்திர நாத் மஹ்தோ, முதல்வரின் மனைவி கல்பனா சோரன், முதல்வரின் அண்ணன் மனைவி சீதா சோரன், மற்ற பிரபலங்களான லூயிஸ் மராண்டி, லோபின் ஹெம்பிராம் போன்றவர்கள் களத்தில் உள்ளனர்.

மொத்த வேட்பாளர்களில் 472 ஆண்கள், 55 பெண்கள், ஒருவர் மூன்றாம் பாலினத்தவர். இவர்களில் 73 பேர் தேசிய கட்சிகளையும், 28 பேர் மாநில அளவிலான கட்சிகளையும், 257 பேர் சுயேச்சைகளாகவும் போட்டியிட்டுள்ளனர். இந்த தேர்தலில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணி ஆட்சியை தக்கவைக்குமா? அல்லது பாஜக கூட்டணி ஆட்சியை கைப்பற்றுமா? என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. மகாராஷ்டிரா, ஜார்கண்டில் இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்வதால் தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். வெளியாட்கள் தொகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளையும், தேர்தல் பாதுகாப்பு பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல், பிரியங்கா காந்தி போட்டியிட்ட வயநாடு எம்பி ெதாகுதி, மகாராஷ்டிராவின் நான்டே எம்பி தொகுதி, 48 சட்டமன்ற ெதாகுதிகளில் நடந்த இடைத்தேர்தல் ஆகியவற்றில் பதிவான வாக்குகள் வரும் 23ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

தற்போதைய நிலவரப்படி, மகா விகாஸ் அகாதி ஆட்சியைப் பிடிக்கும் எனவும், மகாயுதி மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் என்றும், தொங்கு அரசு அமையும் என்றும் கலவையான கருத்துக்கணிப்புகளே நிலவுகின்றன.
வெளிப்படையாக பார்த்தால் இந்த தேர்தலில் பாஜக – காங்கிரஸ் இடையேயான இருமுனைப் போட்டி இருப்பதாக தெரிகிறது. ஆனால் இரு கூட்டணிகள் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. அதாவது, பாஜக – காங்கிரஸ், சிவசேனா – சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் என ஒவ்வொரு அணியிலும் பங்காளி சண்டை போல் தேர்தல் நடக்கிறது.

The post நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் மகாராஷ்டிரா, ஜார்கண்ட் பிரசாரம் இன்றுடன் ஓய்கிறது: தலைவர்கள், வேட்பாளர்கள் சூறாவளி வாக்கு சேகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Maharashtra ,Jharkhand ,MUMBAI ,Dinakaran ,
× RELATED மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் ரூ558 கோடி ரொக்கம், இலவசப்பொருட்கள் பறிமுதல்