டெல்லி: பிரதமர் மோடி உடனடியாக மணிப்பூர் சென்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். மணிப்பூரில் மெய்தி இன சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் மோதல்கள் ஏற்பட்டன. இது வன்முறையாக பரவியது. இந்த சம்பவத்தில், இரு தரப்பிலும் 240 பேர் கொல்லப்பட்டனர். வன்முறையை தொடர்ந்து, 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர். இதனை தொடர்ந்து, ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், பல மாதங்களுக்கு பின்னர் மணிப்பூரின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் கலவரம் வெடித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 2 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 6 பேர் பலியானார்கள். இதனால், ஆர்ப்பாட்டக்காரர்கள் பல்வேறு இடங்களிலும் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த சூழலில், அடுத்த உத்தரவு வரும் வரை இம்பால் மாவட்டம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதன் தொடர்ச்சியாக உடனடியாக, 2 நாட்களுக்கு இணையதளம் மற்றும் மொபைல் வழியேயான இணையதள சேவைகள் முடக்கப்பட்டன.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 3 மே 2023 முதல் மணிப்பூர் பற்றி எரிகிறது. நரேந்திர மோடி உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சென்று பிரசங்கம் செய்கிறார், ஆனால் இன்றுவரை அவரால் மணிப்பூருக்குச் செல்ல முடியவில்லை. பிரதமர் மோடி மணிப்பூருக்குச் செல்ல வேண்டும், அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்திப்பதோடு, நிவாரண முகாம்களில் வசிக்கும் மக்களையும் சந்திக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
மணிப்பூரிலேயே அனைத்துக் கட்சிக் குழுவை பிரதமர் மோடி சந்திக்க வேண்டும். மணிப்பூருக்கு ஜூலை 31, 2024 முதல் முழுநேர ஆளுநர் இல்லை, எனவே விரைவில் முழுநேர ஆளுநர் நியமிக்கப்பட வேண்டும். இவ்வளவு நிர்வாக தோல்விகளுக்கு பிறகும் மணிப்பூர் முதல்வர் ஏன் பாதுகாக்கப்படுகிறார்?. பிரதமர் மோடியும் அமித் ஷாவும் போதைப்பொருள் மாஃபியாவுக்கு எதிராக நேர்மையாகப் போராட விரும்பினால், உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளிலும் விசாரணையை தொடங்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post பிரதமர் மோடி உடனடியாக மணிப்பூர் சென்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்: ஜெய்ராம் ரமேஷ் appeared first on Dinakaran.