சென்னை: சேலத்தில் வரும் 17ம் தேதி நடைபெற இருந்த திமுக இளைஞர் அணி மாநாடு தேதி மாற்றப்பட்டுள்ளது. அதாவது வரும் 24ம் தேதி நடைபெறும் என்று திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. 16 ஆண்டுகளுக்கு பிறகு திமுக இளைஞரணியின் 2வது மாநாடு சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வந்தது. 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. இதில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுவார் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வருகிற 17ம் தேதி நடைபெற இருந்த இளைஞர் அணி மாநாடு தேதி மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: மிக்ஜாம புயலால் பெய்த பெருமழை-வெள்ளம் காரணமாக, சில மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி, மழை-வெள்ள நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் வருகிற 17ம் தேதி சேலத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட “தி.மு.க. இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு” தேதி மாற்றப்பட்டு, வருகிற 24ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறும்.
The post திமுக இளைஞர் அணி மாநாடு தேதி மாற்றம்: வரும் 24ம் தேதி நடைபெறும் என்று திமுக தலைமை கழகம் அறிவிப்பு appeared first on Dinakaran.