×

மாவட்ட அளவில் பள்ளிகளுக்கான கபடி போட்டியில் மஞ்சூர் மாணவரை தாக்கிய நஞ்சநாடு அணி மாணவர்கள்: வீடியோ வைரலானதால் விசாரணை

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இடையே மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கபடி இறுதி போட்டி ஊட்டியில் உள்ள தனியார் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இதில் மஞ்சூர் அரசு பள்ளி அணியும், நஞ்சநாடு அரசு பள்ளி அணியும் மோதின. இப்போட்டியின்போது மஞ்சூர் அரசு பள்ளி மாணவர் ஒருவர் ரைடு சென்றுள்ளார். அவரை பிடித்து வெளியில் தள்ளிய நஞ்சநாடு அரசு பள்ளி அணி மாணவர்கள், யாரும் எதிர்பார்க்காதபோது அந்த மாணவரின் முகத்தில் பலமாக குத்தியுள்ளனர்.

இதில் அந்த மாணவர் நிலை குலைந்த நிலையில், முகத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியுள்ளது.ஆனால் போட்டி நடுவர்கள், பள்ளிகளின் விளையாட்டு ஆசிரியர்கள் உட்பட யாரும் இதனை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். காயமடைந்த அந்த மாணவர் அதன் பின் ரைடு செல்லாத நிலையில், நஞ்சநாடு அரசு பள்ளி அணி வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றது. போட்டியில் மஞ்சூர் பள்ளி மாணவரை தாக்கியதை, நஞ்சநாடு பள்ளி மாணவர்கள் வீடியோவாக எடுத்து அதனை வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டனர்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே கபடி போட்டியில் மஞ்சூர் பள்ளி அணி கபடி போட்டியில் சிறப்பாக விளையாடி வருவதாகவும், அவர்களை திட்டமிட்டே தாக்கியுள்ளதாகவும் குற்றம் சாட்டினர். இது குறித்து இரு பள்ளி விளையாட்டு ஆசிரியர்களிடம் கேட்டபோது, ‘‘விளையாடும்போது லேசாக தாக்கிக்கொண்டனர். இதனை பெரிதுபடுத்த வேண்டாம்’’ என பதிலளித்தனர். இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா விசாரித்து வருகிறார்.

 

The post மாவட்ட அளவில் பள்ளிகளுக்கான கபடி போட்டியில் மஞ்சூர் மாணவரை தாக்கிய நஞ்சநாடு அணி மாணவர்கள்: வீடியோ வைரலானதால் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Nanjanadu ,Manjoor ,Kabaddi ,NEILGIRI DISTRICT ,Ooty ,Manjoor Government School ,Nanjanadu Government School team ,Manjur ,Kabadi ,Dinakaran ,
× RELATED மஞ்சூர்-கோவை சாலையில் அரசு பஸ்சை யானைகள் வழிமறித்ததால் பரபரப்பு