ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக எதிர்பார்த்த அளவிற்கு பெய்யாதது விவசாயிகளிடம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து, வடகிழக்கு பருவமழையாவது ஏமாற்றாமல் கை கொடுக்குமா என்னும் அச்சமும், எதிர்பார்ப்பும் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.நீலகிரி மாவட்டத்தில் இரு முக்கிய பருவமழைகளான தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைகளை நம்பி மலைக்காய்கறி விவசாயம், தேயிலை விவசாயம் நடைபெறும்.
இதுதவிர குடிநீர் தேவைகள், மின் உற்பத்திக்கு ஆதாரமாக உள்ள அணைகளில் நீர் இருப்பு அதிகரிப்பு ஆகியவையும் பருவமழைகளை நம்பியே உள்ளன. பருவ மழைகள் பொய்க்கும் பட்சத்தில் விவசாய பணிகளும், மின் உற்பத்தி பாதிக்க கூடிய சூழலும் உருவாகும். நீலகிரி மாவட்டத்தில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் குளிர் கால மழை, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கோடை கால மழை ஆகியவை பெய்யும். ஜூன் துவங்கி செப்டம்பர் வரை 4 மாதங்கள் தென்மேற்கு பருவமழை காலமாகும்.
இந்நிலையில் நடப்பாண்டில் கடந்த ஜனவரி துவங்கி மே மாதம் வரை வரலாறு காணாத அளவில் வெயிலின் தாக்கம் இருந்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்திக்கு ஆதாரமான அணைகள், பிற குடிநீர் ஆதாரங்கள் வறண்டன. குடிநீர் பிரச்சினையும் தலைதூக்கியது. மேலும் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டதுடன் மழை காய்கறிகள் விவசாய பணிகளும் பாதித்தது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் மழையை எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இருப்பினும் கடுமையான வெயில் காரணமாக மே மாத இறுதி அல்லது ஜூன் மாத துவக்கத்தில் துவங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை குறித்த நேரத்தில் துவங்கவில்லை. மாறாக ஜூலை இரண்டாவது வாரத்தில் துவங்கியது. சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக ஊட்டி, குந்தா, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டியது. நீர் பிடிப்பு பகுதிகளான அவலாஞ்சி அப்பர் பவானி மற்றும் எமரால்டு பகுதிகளிலும் நல்ல மழைப்பொழிவு இருந்தது. இதன் காரணமாக மின் உற்பத்திக்கு காரணமாக அணைகளில் அளவில் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது. இந்த மழை செப்டம்பர் வரை நீடிக்கும் என்ற நம்பிக்கையில் ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் விவசாய பணிகளை துவக்கினர்.
ஆனால் ஆகஸ்ட் மாத துவக்கத்தில் இருந்து கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. மாறாக நீர் பனிப்பொழிவு, மேகமூட்டமான கால நிலை நிலவி வருகிறது. சில சமயங்களில் பகல் நேரங்களில் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மழையை நம்பி விவசாய பணிகள் மேற்கொண்டு இருந்த விவசாயிகள் பயிர்களை காப்பாற்ற கிணற்று பாசனம் மூலம் காலை மாலை வேலைகளில் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். தென்மேற்கு பருவமழை இம்மாத இறுதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், எதிர்பார்த்த அளவிற்கு மழை பொழிவு இல்லாதது விவசாயிகளிடம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து, வடகிழக்கு பருவமழையாவது ஏமாற்றாமல் கை கொடுக்குமா என்னும் அச்சம் விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.
The post மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கும் மேல் எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாத தென் மேற்கு பருவ மழை appeared first on Dinakaran.