திருச்செங்கோடு பஸ் நிலையம் அருகே டீசல் டேங்க் வெடித்து தீப்பிடித்து எரிந்த லாரி: அருகில் வந்த ஸ்கூட்டி கருகியது

திருச்செங்கோடு: திருச்செங்கோடு பஸ் நிலையம் அருகே, கிரானைட் கற்கள் ஏற்றிச் சென்ற லாரி, டீசல் டேங்க் வெடித்ததால், தீப்பிடித்து எரிந்தது. ஆந்திர மாநிலம், சித்தூரிலிருந்து லாரி ஒன்று கிரானைட் கற்களை ஏற்றிக் கொண்டு, சங்ககிரி சாலையில் உள்ள கிரானைட் பாலிஷ் செய்யும் நிறுவனத்திற்கு கொண்டு செல்வதற்காக திருச்செங்கோடு வந்தது. லாரியை வேலூரைச் சேர்ந்த சரவணன் (40) ஓட்டி வர, உரிமையாளர் ராமச்சந்திரநாயுடு (59) உடன் வந்தார். நேற்று காலை 11 மணியளவில், புதிய பஸ் நிலையம் ரவுண்டானா அருகே வந்த போது, லாரியின் ஒரு சக்கரத்தில் டயரில் அதிக வெப்பம் காரணமாக தீப்பிடித்தது. அப்போது டயர் வெடித்ததோடு, டீசல் டேங்க் வெடித்து லாரி தீப்பிடித்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த இருவரும் லாரியிலிருந்து குதித்து தப்பினர். அப்போது, லாரியை ஒட்டியவாறு குடும்பத்துடன் ஸ்கூட்டியில் வந்த கருக்கம்பாளையத்தை சேர்ந்த நரசிம்மா (45) என்பவருக்கு இடது கையில் தீக்காயம் ஏற்பட்டது. அவர் உயிர் பிழைத்தால் போதும் என ஸ்கூட்டியை போட்டு விட்டு தப்பினார். இதில், ஸ்கூட்டி எரிந்து சேதமானது.

தகவலின் பேரில், திருச்செங்கோடு தீயணைப்பு நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையில் வந்த வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதையடுத்து, திருச்செங்கோடு போக்குவரத்து போலீசார் தீப்பிடித்த லாரியை அங்கிருந்து அகற்றி, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். மக்கள் நடமாட்டமும், வாகன போக்குவரத்தும் அதிகம் உள்ள இடத்தில் இந்த சம்பவம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தீப்பிடித்து எரிந்த லாரியை, திருச்செங்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் பாமாபிரியா பார்வையிட்டார்.

The post திருச்செங்கோடு பஸ் நிலையம் அருகே டீசல் டேங்க் வெடித்து தீப்பிடித்து எரிந்த லாரி: அருகில் வந்த ஸ்கூட்டி கருகியது appeared first on Dinakaran.

Related Stories: