90 நிமிடங்கள் வரையிலும் மணிப்பூர் பற்றி பேசவில்லை: பிரதமர் மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி பதிலளித்து பேசிய போது, எதிர்க்கட்சி எம்பிக்கள் பாதியிலேயே வெளிநடப்பு செய்து வெளியில் வந்தனர். எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு குறித்து காங்கிரஸ் எம்பி சசி தரூர் கூறுகையில், ‘‘நாங்கள் பிரதமரிடம் மணிப்பூர் குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுமாறு கேட்டுக் கொண்டோம். அவரது உரையில் 90 நிமிடம வரையிலும் மணிப்பூர் என்ற வார்த்தையையே குறிப்பிடவில்லை. அவர் முழுக்க முழுக்க அரசியல் உரையை நிகழ்த்தினார். காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் மீது பழைய தாக்குதல்கள், அவமதிப்புகள் மட்டுமே இருந்தன. ஆனால் நம்பிக்கையில்லா தீர்மானம் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் தரவில்லை.

இது முற்றிலும் அரசியல் பேச்சு. புதிதாக ஒன்றுமில்லை? நமக்கு தெரியாத எந்த விஷயத்தை அவர் தேசத்திற்கு சொன்னார்? மொத்தத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் பற்றி எதையும் அவர் பேசவில்லை’’ என்றார். நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்த காங்கிரசின் கவுரவ் கோகோய் கூறுகையில், ‘‘இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் 2 நோக்கங்களைக் கொண்டது. ஒன்று, மணிப்பூர் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், மற்றொன்று, மணிப்பூர் பிரச்னையில் பிரதமர் மோடி பேச வேண்டும். நீண்ட காலத்திற்குப் பிறகு, பிரதமர் மோடி அவையில் பேசுவதை தேசம் பார்க்க முடிந்தது. அவரது மவுனத்தை நாங்கள் கலைத்துள்ளோம்.

ஆனால் மணிப்பூருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கம் நிறைவேறவில்லை. பிரதமர் மோடி தனது பொறுப்பிலிருந்து தப்பி ஓடுகிறார்’’ என்றார். திமுக எம்பி டிஆர் பாலு கூறுகையில், ‘‘மணிப்பூர் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் நடந்துள்ள வன்முறை சம்பவங்கள் பற்றிய நிலை குறித்து பிரதமர் பேசுவார் என எதிர்பார்த்தோம். ஆனால் அவரோ அரசியல் பேச்சை கொடுத்துள்ளார். நம்பிக்கையில்லா தீர்மானத்தின் நோக்கம், மணிப்பூர், அரியானா மற்றும் வன்முறை நடைபெறும் பிற பகுதிகள் தொடர்பாக பிரதமரின் பதிலை கேட்பதுதான். பிரமதர் மோடி பேசுகையில் நாங்கள் பலமுறை தலையிட்டும் அவர் மணிப்பூர் பற்றியே பதிலளிக்கவில்லை’’ என்றார்.

* காவிமயமாக்கலை விரட்ட வேண்டிய நேரம்

மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் நேற்று பேசுகையில், ‘‘மோடி 100 முறை வேண்டுமானாலும் பிரதமராக வரட்டும். அதைப் பற்றி கவலையில்லை. ஆனால் காங்கிரஸ் கட்சி எப்போதுமே இந்த நாட்டு மக்கள் மீது அக்கறை கொண்டிருக்கும். மகாத்மா காந்தி 1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை கொண்டு வந்தார். இப்போது, பிரித்தாளுதல், மதவாதம், காவிமயமாக்கலை இந்த நாட்டை வெளியேற்ற வேண்டிய நேரம் இது.

மணிப்பூரில் நடக்கும் வன்முறைகள் சிறிய பிரச்னை அல்ல. அது இன வன்முறை. உள்நாட்டு போர். இதில் பிரதமரின் தலையீடு இன்றியமையாதது. அதற்காகவே இந்த நம்பிக்கையில்லா தீர்மானம். ஹஸ்தினாபூரிலோ அல்லது மணிப்பூரிலோ பெண்களுக்கு எதிராக என்ன நடக்கிறது என்பதைப் பற்றி மன்னர் பாராமுகமாக இருக்கக்கூடாது’’ என மகாபாரதத்தை ஒப்பிட்டு பேசினார். இதற்கு அமித்ஷா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பிரதமர் பற்றி ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறினார்.

The post 90 நிமிடங்கள் வரையிலும் மணிப்பூர் பற்றி பேசவில்லை: பிரதமர் மீது எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: