தன்மானம் கொண்ட அதிமுகவை பார்த்து பாதந்தாங்கிகள் என்பது நகைச்சுவையானது: எடப்பாடி பழனிசாமி அறிக்கை

சென்னை: அதிமுகவை பாதந்தாங்கிகள் என சொல்வது நகைச்சுவையானது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக அரசில் தொடங்கப்பட்ட சில முக்கிய திட்டங்களான அம்மா மினி கிளினிக், அம்மா இருசக்கர வாகன மானியம், பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவி திட்டம், மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு மக்கள் நலத் திட்டங்களுக்கு நிறுத்தப்பட்டது. மாநில நிதியில் செயல்படுத்தப்பட்ட அத்திக்கடவு – அவிநாசி திட்டம் நிறைவேற்றப்படவில்லை. பாஜவிடம் தமிழ்நாட்டின் உரிமைகளை அதிமுக அடகு வைத்துள்ளதாக பேசியுள்ளார். திமுக ஆட்சியில், இதுவரை ஒரு புதிய பேருந்தைக்கூட வாங்கவில்லை.

தற்போது இருக்கும் பேருந்துகளில் சுமார் 40 சதவீதத்திற்கும் மேல் ஓடவில்லை. பழைய பேருந்துகளின் ஆயுட்காலத்தை நீட்டித்து அரசாணை வெளியிட்டதை தவிர வேறு என்ன சாதித்தது? 30 சதவீத பேருந்துகளில் மட்டுமே பெண்களுக்கு விலையில்லா பேருந்து சேவையை அனுமதித்துள்ளனர். அதிமுக ஆட்சியில் உறவினர்களுக்கு டெண்டர் வழங்கியது குறித்து பேசியுள்ளார். இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றம் எந்தவிதமான முறைகேடும் நடைபெறவில்லை என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதிமுக ஆரம்பித்தது முதல் இன்றுவரை தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் என்று தமிழகத்தில் வாழும் அனைத்து மக்களுக்கும் பாதுகாவலனாய் விளங்கி வருகிறது. நிமிர்ந்த நடையும், நேர் கொண்ட பார்வையும், தன்மானமும் கொண்ட எங்களை பார்த்து பாதந்தாங்கிகள் என்று சொல்வது நகைச்சுவையானது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post தன்மானம் கொண்ட அதிமுகவை பார்த்து பாதந்தாங்கிகள் என்பது நகைச்சுவையானது: எடப்பாடி பழனிசாமி அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: