10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 3வது பல் முளைப்பதை வைத்து வயதை தீர்மானிக்க முடியாது: போக்சோ குற்றவாளியை விடுவித்தது ஐகோர்ட்

மும்பை: பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண் மைனர் என்பதற்கு சரியான ஆதாரங்களை சமர்பிக்காததால், இந்த வழக்கில் 10 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியை மும்பை உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி அனுஜா பிரபுதேசாய் முன், பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட மைனர் பெண் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில் அவர் அளித்த தீர்ப்பில், ‘பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர் சிறுமி என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அவர் சிறுமி என்பதற்கான மருத்துவ ஆதாரங்கள் இல்லை.

மருத்துவர் அளித்த அறிக்கையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் வயது 15 முதல் 17 வயதுக்குள் இருக்கும் என்று உத்தேசமாக மதிப்பிட்டுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மூன்றாவது பல் (மேல் மற்றும் கீழ் தாடையின் ஒவ்வொரு பக்கத்தின் பின்புறத்திலும் கடைசியில் முளைக்கும் பல்லை மூன்றாவது பல் என்கின்றனர். இந்த பற்கள் பொதுவாக 17 முதல் 23 வயதிற்குள் வரும். ஆனால் அனைவருக்கும் முளைப்பது இல்லை.) முளைக்கவில்லை என்பதால், அவருக்கு இன்னும் 18 வயது பூர்த்தியாக வில்லை என்றும் மருத்துவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதனை ராய்காட் போக்சோ சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.

ஆனால் மூன்றாவது பல் முளைக்கவில்லை என்ற காரணத்திற்காக அந்தப் பெண் சிறுமி என்று கூறிவிட முடியாது. அதனை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது. பாதிக்கப்பட்ட பெண் மைனர் என்பதை நிரூபிக்க அரசு தரப்பு தவறிவிட்டது. அதனால் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு கீழமை நீதிமன்றத்தால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற மனுதாரரை விடுவிக்கிறேன்’ என்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளார். இதுகுறித்து மும்பை தனியார் மருத்துவமனையின் டாக்டர் கோபால் சர்மா கூறுகையில், ‘பல காரணங்களால் சிலருக்கு பல் முளைப்பதில்லை. இதற்கான காரணங்களை மருத்துவ மற்றும் கதிரியக்க ஆய்வுகள் மூலம் ஆராயலாம். மூன்றாவது பல் எப்போது முளைக்கும் என்பதற்கு வயது ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை. பொதுவாக 23 வயது ஆகும் வரை கூட மூன்றாவது பல் முளைக்கும்’ என்றார்.

The post 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 3வது பல் முளைப்பதை வைத்து வயதை தீர்மானிக்க முடியாது: போக்சோ குற்றவாளியை விடுவித்தது ஐகோர்ட் appeared first on Dinakaran.

Related Stories: