துணை வேந்தர் தேடுதல் குழுவை ஆளுநர் நியமித்தது மாநில அரசின் உரிமையைப் பறிக்கும் செயல்: ஜவாஹிருல்லா கண்டனம்


சென்னை: துணை வேந்தர் தேடுதல் குழுவை ஆளுநர் நியமித்தது மாநில அரசின் உரிமையைப் பறிக்கும் செயல் என்று மமக தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும், எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில்; பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நியமனம் செய்வதற்கான தேடுதல் குழுவில் பல்கலைக்கழக ஆட்சி குழு (சின்டிகேட்) உறுப்பினர், தமிழக அரசின் பிரதிநிதி, ஆளுநரின் பிரதிநிதி என மூன்று பேர் மட்டுமே தற்பொழுது கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறையாகும். தமிழ்நாட்டின் 3 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தேர்வு செய்யத் தற்போது ஆளுநர் நியமித்துள்ள தேடுதல் குழுவில் வெளிமாநில நபர்கள் இடம் பெற்றுள்ளனர்.

சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் தேடுதல் குழுவில் தமிழ்நாடு அரசின் பிரதிநிதிக்கு ஆளுநர் ரவி இடம் அளிக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தேர்வுக் குழுவில் இடம் பெற்றுள்ள இரண்டு நபர்கள் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்களாகவும் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத் துணை வேந்தர் தேடுதல் குழு ஒருங்கிணைப்பாளராக யுஜிசி பிரதிநிதியான சுஷ்மா யாதவை ஆளுநர் நியமித்திருப்பது ஜனநாயக மாண்புக்கு எதிரானது. மேலும் சென்னை பல்கலைகழகம் மற்றும் ஆசிரியர் கல்வியல் பல்கலைகழகம் ஆகிய இரு பல்கலைகழகங்களில் தேடுதல் குழுக்களில் எச் சி எஸ் ரத்தோர் என்ற பீகார் மாநிலத்தவர் நியமிக்கப்பட்டுள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்றது.

பல்கலைக்கழக மானிய ஆணையம்.(யூஜிசி) விதிகளின் படி, மாநில பல்கலைக்கழகத்திற்குத் துணைவேந்தரை நியமிக்க யுஜிசி விதிகளை மட்டும் பின்பற்றினால் போதுமானது. யுஜிசி சார்பில் உறுப்பினரைச் சேர்க்க வேண்டும் என்ற கட்டாய விதிமுறை இல்லை. பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனத்தில் ஏற்கனவே உள்ள நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு சார்பில் ஆளுநருக்கு முன்னரே கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டிருந்தது. அரசின் அலுவல் விதிகளின்படி அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட வேண்டும். ஆனால் ஆளுநர் தன்னிச்சையாக அறிவிக்கை வெளியிட்டது மரபு மற்றும் விதிகளுக்கு முரணானது. உயர்கல்வியில் மாநிலத்தின் உரிமையைப் பறிக்கும் செயலாக ஆளுநரின் நடவடிக்கை அமைந்துள்ளது.

தமிழ்நாடு அரசின் பரிந்துரைகளை கவனத்தில் கொள்ளாமல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் எதேச்சதிகாரப் போக்கோடு ஆளுநர் தொடர்ந்து செயல்பட்டு வருவதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post துணை வேந்தர் தேடுதல் குழுவை ஆளுநர் நியமித்தது மாநில அரசின் உரிமையைப் பறிக்கும் செயல்: ஜவாஹிருல்லா கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: