ஆண்டு தோறும் ஜூன் 12ம் தேதி முதல் ஜனவரி 28ம் தேதி வரை, காவிரி டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும். அணையின் நீர்மட்டம் 90 அடியாக இருந்தால், பருவமழையை எதிர்நோக்கி, டெல்டா பாசனத்திற்கு 230 நாட்களுக்கு 330 டிஎம்சி தண்ணீர் திறக்கப்படும். பாசனப் பகுதிகளில் மழை பெய்தால், பாசன தேவை குறையும். மேட்டூர் அணையின் 91 ஆண்டுகால வரலாற்றில் குறித்த நாளான ஜூன் 12ம் தேதி, 19 ஆண்டுகள் மட்டுமே டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
அணையின் நீர் இருப்பும், வரத்தும் திருப்திகரமாக இருந்த காரணத்தால், விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று ஜூன் 12க்கு முன்பாக, 11 ஆண்டுகள் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டுடன் 61 ஆண்டுகள் அணையின் நீர் இருப்பும், வரத்தும் திருப்திகரமாக இல்லாத காரணத்தால், தாமதமாகவே திறக்கப்பட்டுள்ளது. இந்த நீர்ப்பாசன ஆண்டிலும் ஜூன் 12ம் தேதி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து, 390 கனஅடியாகவும், நீர்மட்டம், 43.71 அடியாகவும், நீர் இருப்பு 14.08 டிஎம்சியாகவும் இருந்தது.
அணையின் இருப்பில் இருந்த நீரில் 4.5 டி.எம்.சி தண்ணீரை மட்டுமே பயன்படுத்த முடியும். மீதமுள்ள 9.5 டி.எம்.சி தண்ணீரை மீன்வளத்தை பாதுகாக்கவும், குடிநீர் திட்டங்களுக்காகவும் இருப்பு வைக்க வேண்டியிருந்தது. அதனால், கடந்த ஜூன் 12ம் தேதி, பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனையடுத்து, கர்நாடகா அரசு, தமிழகத்திற்கு தரவேண்டிய காவிரி நீரை திறந்து விட வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.
ஆனால், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என அம்மாநில அரசு பிடிவாதமாக இருந்ததால், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கும்படி, கர்நாடகாவுக்கு உத்தரவிடும்படி, ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். இதனிடையே, தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டது. இருந்த போதிலும், கர்நாடக அரசு அதனை பொருட்படுத்தாமல் இருந்தது. இந்நிலையில், கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடக மாநிலம் குடகு உள்ளிட்ட காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியது.
இது படிப்படியாக அதிகரித்து கனமழை பெய்ததால், கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி, முழு கொள்ளளவை எட்டின. இதனையடுத்து, அந்த அணைகளின் பாதுகாப்பை கருதி, உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டது. இதனால், ஒகேனக்கல் காவிரியில் கடந்த ஜூன் 28ம் தேதி 200 கனஅடியாக இருந்த நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறப்பால் படிப்படியாக அதிகரித்த நீர்வரத்து, கடந்த 26ம் தேதி 98 ஆயிரம் கனஅடியாகவும், நேற்று முன்தினம் 1 லட்சத்து 41 ஆயிரம் கனஅடியாகவும், நேற்று(28ம் தேதி) மாலை நிலவரப்படி விநாடிக்கு 1 லட்சத்து 60 ஆயிரம் கனஅடியாகவும் அதிகரித்தது.
இதனால், ஒகேனக்கல் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அங்குள்ள அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அதே போல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் படிப்படியாக அதிகரித்து வந்தது. கடந்த 17ம் தேதி முதல் கர்நாடக அணைகளின் உபரிநீர், மேட்டூர் அணைக்கு வரத் தொடங்கியதால், நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வந்தது. நேற்று மாலை 4 நிலவரப்படி, அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 1 லட்சத்து 54 ஆயிரத்து 511 கனஅடியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 110 அடியாக உயர்ந்தது.
அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்ததாலும், நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதாலும், காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறப்பது குறித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று மதியம் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனை தொடர்ந்து, மேட்டூர் அணையில் இருந்து 12,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடும்படி முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி, நடப்பு நீர்ப்பாசன ஆண்டில், 45 நாட்கள் தாமதமாக, நேற்று மாலை மேட்டூர் அணையின் வலது கரையில், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, அணையின் மேல்மட்ட மதகின் மின்விசையை இயக்கி, மதகுகளை உயர்த்தி காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீரை திறந்து விட்டார்.
துவக்கத்தில் மேல்மட்ட மதகு வழியாக திறக்கப்பட்ட தண்ணீர், பின்னர் அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையங்கள் வழியாக திறக்கப்பட்டது. காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால், அணை மின் நிலையம், சுரங்க மின் நிலையம் மற்றும் 7 கதவணை மின் நிலையங்களில் மின் உற்பத்தி துவங்கியது. மேட்டூர் அணை நிரம்பும் நிலையில் உள்ளதால், அணையின் இடது கரையில் உள்ள உபரி நீர் போக்கியில் இருந்து திடீரென உபரி நீர் திறக்கப்படலாம்.
இதனால் காவிரி கரையோரத்தில் உள்ள மக்கள், பாதுகாப்பாக இருக்கும் படியும், தாழ்வான பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படியும், ஆற்றங்கரையில் குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ, நீச்சல் அடிக்கவோ, மீன்பிடிக்கவோ செல்லக்கூடாது என்று கலெக்டர் பிருந்தாதேவி எச்சரித்துள்ளார். மேட்டூர் அணையின் உபரிநீர் போக்கி பகுதியில் உள்ள அண்ணா நகர், பெரியார் நகர், தங்கமாபுரிபட்டணம் பகுதிகளில், மேட்டூர் மண்டல துணை தாசில்தார் கோவிந்தராஜ், வருவாய் ஆய்வாளர் வெற்றிவேல், விஏஓ சுதா ஆகியோர், ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேட்டூர் அணைக்கு நேற்றிரவு 8 மணியளவில் நீர்வரத்து விநாடிக்கு 1 லட்சத்து 52 ஆயிரத்து 903 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணை நீர்மட்டம் 112.27 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 81.67 டிஎம்சியாக இருந்தது. அதே போல். ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 1 லட்சத்து 60 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
* மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல் காவிரியில் விநாடிக்கு
1 லட்சத்து 51,511 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, காவிரி ஆறு பாயும் மாவட்டங்களில் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்றும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை உடனடியாக பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும், அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தரும்படியும், மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
The post டெல்டா பாசன சாகுபடிக்காக மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு: நீர்மட்டம் 110 அடியை தாண்டியதால் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.