நாட்டிலேயே முதல் முறையாக மேற்கு ரயில்வே மற்றும் கிழக்கு ரயில்வேயை இணைத்து 3,381 கி.மீ. தூரம் வரை ஐஎன்பிடி ரயில்நிலையம் முதல் டன்குனி ரயில் நிலையம் வரை பிரத்யேகமான சரக்கு ரயில் தடம் அமைக்க டிஎப்சிசிஐஎல் (இந்திய பிரத்யேக சரக்கு வழித்தட கழகம்) முடிவு செய்தது. உத்தரப்பிரதேசம், பீகார், பஞ்சாப், அரியானா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் உள்ளிட்ட 9 மாநிலங்கள் வழியாக இந்த சிறப்பு சரக்கு வழித்தடம் செல்கிறது. 11 ஆயிரத்து 827 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப் பட்டுள்ளது. 596 பெரிய பாலங்களும், 4,643 சிறிய பாலங்களும் கட்டப்பட்டுள்ளன. அதில் 117 ரயில்வே ஸ்டேஷன்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வழித்தடம் அமைக்க ரூ.81 ஆயிரத்து 459 கோடி திட்டமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
உலக வங்கி, சர்வதேச ஒத்துழைப்புக்கான ஜப்பான் வங்கி மற்றும் ஒன்றிய அரசின் உதவியுடன் இந்த நிதி பெறப்பட்டுள்ளது. அதில், தீனதயாள் உபாத்யாயா ரயில் நிலையம் முதல்- சோன்நகர் ரயில் நிலையம் வரை 2100 கி.மீ. தூரத்துக்கான சரக்கு ரயில் வழித்தட பணிகள் தற்போது முடிவுற்றுள்ளது. இது ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்காளத்தின் இசிஎல், சிசிஎல், பிசிசிஎல் & என்சிஎல் ஆகியவற்றின் முக்கிய நிலக்கரி மண்டலத்தை இணைக்கிறது. வழக்கமாக சரக்கு ரயில் 20 கி.மீ. வேகத்தில்தான் செல்லும். ஆனால் இந்த பிரத்யேக ரயில் பாதையில், சரக்கு ரயில்களை அதிகபட்சமாக மணிக்கு 100 கிமீ வேகத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் 60 கி.மீ.வேகத்தில் இயக்கப்படும். பின்னர் படிப்படியாக வேகம் அதிகரிக்கப்படும்.
மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுவதால், நிலக்கரியை சுரங்கங்களில் இருந்து மின் உற்பத்தி நிலையங்களுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்து நேரம் கணிசமாகக் குறைகிறது. அதுமட்டுமின்றி மற்ற அத்தியாவசியப் பொருட்களுடன் இரும்பு மற்றும் ஸ்டீல், வாகனங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் என பல்வேறு சேவைக்கும் இந்த ரயில் பாதை விரிவுபடுத்தப்பட உள்ளது. உலக வங்கி நிதி உதவியுடன் ரூ.5705 கோடி செலவில் இந்த முக்கிய ரயில் சேவை உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவையில் உத்தரபிரதேசத்தில் 2 நிலையங்கள், பீகாரில் 6 நிலையங்கள் என மொத்தம் 8 ரயில் நிலையங்கள் உள்ளன.
* ஒரு நாளைக்கு 200 சரக்கு ரயில்களை இந்த பிரத்யேக வழித்தடத்தில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
* இந்த திட்டம் மூலம் தற்போதுள்ள டெல்லி-ஹவுரா ரயில் பாதையில் ரயில் போக்குவரத்து நெரிசல் குறையும். சரக்கு ரயில்கள் டிஎப்சிசிஐஎல் பிரத்யேக வழித்தடத்திற்கு மாற்றப்பட்டதன் மூலம், பயணிகள் ரயில்கள் சரியான நேரத்தில் இயக்க முடியும். இதன் மூலம் வழக்கமான பராமரிப்பு மேற்கொள்ள அதிக நேரம் கிடைக்கும்.
* இந்த திட்டம் மூலம் எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரயில்களின் நேரத்தை குறைத்து கூடுதல் ரயில் பெட்டிகளுடன் இயக்க வழிவகுக்கும்.
* தற்போது சரக்கு ரயில்கள் மணிக்கு 20-30 கி.மீ. வேகத்தில் செல்கிறது. ஆனால், இந்த வழித்தடத்தில் சரக்கு ரயிலின் சராசரி வேகம் மணிக்கு 60-70 கி.மீ வரை செல்லும்.
* இந்த வழித்தடத்தில் ரயில் சேவை தொடங்குவது மூலம் உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களின் வேளாண்மை, உணவுப் பதப்படுத்துதல், சிறு குறு தொழில் மற்றும் கைவினைத் தொழில்களுக்கு அதிக அளவில் உற்பத்தி செய்ய ஊக்கமளிக்கும்.
* இந்தியாவில் முதல் முறையாக 32.5 டன் சுமையுடன் நீண்ட தூர ரயில் இந்த வழித்தடத்தில் இயக்கப்பட இருக்கிறது.
* மின்பாதை உயரமாக உள்ளதால், கன்டெய்னர்கள் இரு மடங்கு ஏற்றிச் செல்ல முடியும். கூடுதலாக பெட்டிகளை இணைக்க முடியும். இதனால், அதிகமான சரக்குகளை கையாள முடியும். இதனால், வருமானம் அதிகரிக்கும். பொருட்களை கொண்டு செல்கிற நிறுவனங்களுக்கும் வேகம் மற்றும் கூடுதல் பொருட்களை ஏற்றிச் செல்வதால், நேரம் மிச்சம் ஏற்படும். செலவும் குறையும். இதனால் நிறுவனங்களுக்கு அதிக வருமானம் கிடைக்கும்.
* ரயில் வேகத்தை அதிகரிக்க 225 கிலோ வாட்ஸ் இரட்டை மின்சாரப் பாதை இந்த வழித்தடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
* ஒரு நாளைக்கு 1.5 கிமீ புதிய ரயில் தடம் போடக்கூடிய தானியங்கி புதிய பாதைக் கட்டுமான (*TC) இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது
* ரயில் பாதுகாப்பாகவும், ஆற்றலுடனும் இயங்குவதற்கு ரயில் பாதுகாப்பு மற்றும் எச்சரிக்கை அமைப்பு அமைக்கப்பட்டுள்ளது.
* இந்த வழித்தடத்தில் பயணிகள் ரயில்கள் எளிதில் கடக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
* மேலும் 4 சரக்கு வழித்தடம்
சரக்கு ரயில்வே பொதுமேலாளர் ஜெயின் மற்றும் துணை பொதுமேலாளர் சித்ரேஷ் ஜோஷி கூறியதாவது: நாட்டிலேயே முதல் முறையாக நீண்ட தூர சரக்கு ரயில்வே தொடங்கப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி இந்த திட்டத்தை முடித்துள்ளோம். மீதம் உள்ள பகுதிகளிலும் திட்டமிட்டபடி பணிகளை முடிப்போம். இந்த புதிய சரக்கு ரயில் வழித்தடத்தால், விபத்துகள் குறையும். செலவு குறையும், வருமானம் அதிகரிக்கும். நிலக்கரி அதிகமாக கையாளப்படுவதால் மின்தட்டுப்பாடு ஏற்படாது.
தற்போது மேற்கு மற்றும் கிழக்கு ரயில்வேயை இணைத்து இந்த வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் 1115 கி.மீ.தூரத்துக்கு கிழக்கு கடற்கரை வழித்தடம், கிழக்கு- மேற்கு துணை வழித்தடம் இரண்டு, வடக்கு மற்றும் தெற்கு துணை வழித்தடம் என மொத்தம் 4 வழித்தடங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு சரக்கு ரயில் வழித்தடம் அமைப்பது குறித்து ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
* நவீன கட்டுப்பாட்டு அறை
டி.எஃப்.சி.சி.ஐ.எல் அலகாபாதில் ஒரு அதிநவீன செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையத்தை அமைத்துள்ளது. இது அர்ப்பணிக்கப்பட்ட கிழக்கு மற்றும் மேற்கு சரக்கு வழித்தடத்தில் (EDFC), ரயில் இயக்கம் மற்றும் மின்சார விநியோக அமைப்பு உள்ளிட்ட அமைப்பைக் கட்டுப்படுத்தல், கண்காணித்தல் என 1,337 கிமீ நீளமுள்ள முழு வழித்தடத்திற்கும் கட்டுப்பாட்டு மையமாக செயல்படும். இந்த செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையம் 13,030 சதுரமீட்டரில் 4.20 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ளது. சூரிய சக்தி மூலம் மின்சாரம், மழைநீர் சேகரிப்பு கூடிய சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் இந்த கட்டிடம் உள்ளது.
மாற்றுத்திறனாளிகள் எளிதாக அணுகுவதற்கும் இயக்கத்திற்கும் ஏற்ற வகையில் உள்ளது. மேலும் இதன் சிறப்பம்சமாக 1560 சதுர மீட்டர் பரப்பளவு திரை அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த ரயில் மேலாண்மை அமைப்பு (TMS) மற்றும் மேற்பார்வை, கட்டுப்பாடு, தரவு கையகப்படுத்துதல் (SCADA) அமைப்பு இங்கு பொருத்தப்பட்டுள்ளது. இந்த செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையம் மூலம் ரயில் மற்றும் ரயில் நிலையங்களை கண்காணிக்க முடியும்.
குறிப்பாக ஆபத்தான நேரத்தில் மையத்தில் இருந்தே தீயணைப்பு அலாரங்கள் உள்ளிட்ட உபகரணங்களை கட்டுப்படுத்தலாம். ரயிலின் இயக்கம் இதன் மூலம் முன்கூட்டியே கண்காணிக்கப்படுவதால் பாதுகாப்பு மேம்படும். ரயில்களை பெரிய திரையில் கண்காணித்தபடியே அதிகாரிகள் இருப்பார்கள். சிக்னல் கோளாறு ஏற்பட்டாலோ, இடையில் பிரச்னை ஏற்பட்டாலோ, உடனடியாக அடுத்த ரயில்நிலைய அதிகாரி்கள் உஷார் படுத்தப்படுவார்கள். அதேநேரத்தில் மற்ற ரயில்களுக்கும் தகவல் பரிமாறப்படும். உடனடியாக ரயில்களை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் விபத்து பெருமளவில் தவிர்க்கப்படும்.
The post மேற்கு-கிழக்கு ரயில்வேயை இணைத்து ரூ.81,459 கோடியில் நாட்டில் முதன்முறையாக 3,381 கி.மீ பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடம் appeared first on Dinakaran.